பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

217


குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவு வேண்டும்.

நாம் விரும்பி மகிழ்ந்து அனுபவிப்பன எல்லாம் மற்றவர்களுக்கும் உரியனவாகச் செய்வதே, நீதியைச் சார்ந்த வாழ்க்கை முறையென்ற ஒழுக்க உணர்வு தேவை. அன்பினால் மட்டுமே அக நிலையிலும் புறநிலையிலும் தோன்றும் சிக்கல்களுக்கு எளிதில் - நெடிய பயன்தரத் தக்க வகையில் தீர்வு காண முடியும்; தீர்வு காண வேண்டும் என்ற நம்பிக்கை தேவை.

நமது வாழ்க்கைக்குக் குறிக்கோள் என்று ஏதாவது இருக்குமானால் - பயன் என்று ஒன்று இருக்குமானால் - அது அன்பே ! அன்பே ! என்றறிதல் வேண்டும்.

காண்போரை யெல்லாம் இனிய முக மலர்வோடு காண்க! இனிய வார்த்தைகளைப் பேசுக! உள்ளத்தாலும் உரையாலும் உடலாலும் வணக்கத்துடன் வரவேற்றுப் பழகுக! இனிய முகமன் கூறுக! புகழ்ந்து பாராட்டுக! உண்பித்திடுக! மகிழச் செய்க!

இவ்வாறு அன்பு செய்யக் கற்றுக் கொண்டால் இந்த மண்ணிற்கு விண்ணகம் வாராது போகுமா?

கு.vi.15