பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

223


வேண்டும் என்று வளர்ந்து வந்த உணர்வை "நவீன உணர்ச்சி” என்று வியந்து பாராட்டி வரவேற்கிறான் பாரதி!

பாரதி வாழ்ந்த காலத்தில்-சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தி வளர்ந்து வந்தது! பாரதி, கடவுள் பக்தியையே மடைமாற்றி, தேச பக்தியாக்க விரும்பினான்.

பிரகலாதன், துருவன் ஆகியோர் விஷ்ணுவினிடத்தில் காட்டிய பக்தியைப் போல் நாம் நமது தேசத்தினிடத்தில் பக்தியைக் காட்டவேண்டும் என்று பாரதி அறிவுரை கூறுகிறான்.

தேச பக்தி வளர, "சுதேசியம்” என்ற தர்மத்தை அனுசரிக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்துகிறான். பாரதி, தனது அறிவுரைக்கு அரணாக விவேகானந்தரின் உபதேசத்தைக் காட்டுகிறான்!

"எனது பாரத புத்திரர்களே! இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாதெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே!

மக்கள் எல்லாம் மகாசக்தியின் ஆவிர்ப் பாவங்கள்! இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்! இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்! இதைக் காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது” என்பது விவேகானந்தரின் அருள்வாக்கு!

பாரதி, தேச பக்தர்களைத் தேவர்கள் என்றும், தேச பக்தியில்லாத தேசத் துரோகிகளை அசுரர்கள் என்றும் கூறுகிறான்.

தாய் நாட்டின் நன்மைக்காக அறவழியில் அமைதியாக நாடெங்கும் நல்வழிகளைக் கண்டும் அமைத்தும் தொண்டு செய்வதைத் தேசத் துரோகிகள்-அசுரர்கள் தடுக்க முயல்கிறார்கள்.