பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

235



இன்றைய இளைஞர்கள் கடின உழைப்பைப் பற்றி கனவிலும்கூட எண்ணுவதில்லை. ஏன் தாய் மொழியாகிய தமிழில் கூட இன்றைய இளைஞர்களுக்கு விருப்பம் இல்லை.

வீட்டு மொழியை கற்பதை விட்டுவிட்டு வேறு வேறு மொழிகளையெல்லாம் கற்கும் இழிநிலையை எண்ணி எண்ணிப் பொருமுகிறான் பாரதி.

தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வரலாற்றின் சிறப்புக்களையும் அந்த சிறப்புக்கு காரணமாக இருந்த பெரியோர்களின் வரலாறுகளையும் ஞானிகள், மகான்களைப் பற்றியும் கல்வி நிலையங்களில் போதிக்க வேண்டும்.

இன்றைய கல்வியில், பகுத்தறிவு என்ற பெயரில் தாயுமானார் அருளிச் செய்த கவிதைகளை நமது கல்லூரி மாணவர்கள் கற்கும் வாய்ப்புப் பெறவில்லையே என்று கவலைப்படுகிறான் பாரதி!

அதுமட்டுமல்ல, ஒரு தவறான-பைத்தியக்காரத்தரமான கருத்தும் இளைஞர்களிடம் பரப்பப்படுகிறது. அதாவது, யாக்ஞவல்யர், சங்கரர் முதலிய அவதார புருஷர்களைப் பற்றியும் அர்ஜூனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மகாவீரர்களைப் பற்றியும் இன்றைய இளைஞர்கள் கேள்விப்பட்டது கூட இல்லை!

ஒரோ வழி கேள்விப்பட்டாலும் அவர்கள் நவீன காலத்து, புதுமைகளைப் பற்றி அறியாதவர்கள் என்று கருதி அலட்சியப்படுத்துகிறார்கள். பழங்காலத்துப் பெரியவர்கள் அந்தக் காலத்தில் கண்ட கடுமையான செய்திகளின் அடிப்படையில்தான் பின்னைப் புதுமைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன என்பதை மறுத்தல் இயலாது.

பாரதி, பாரத ஜாதியினர் ஆண்மையுடன் விளங்க வேண்டும் என வற்புறுத்துகிறான். புதிய ஆத்திசூடியில் "அச்சம் தவிர்" என்றும் "ஆண்மை தவறேல்” என்றும்