பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

237


பயிற்சியும் முயற்சியும் இளைஞர்களுக்குத் தேவை என்பது பாரதியின் கருத்து. இந்தக் கருத்தினைப் பல நடைமுறை உதாரணங்களுடன் விளங்குகிறான்.

"மனத் துணிவற்ற சாதியினர் மண் சுமக்கக் கூட, தகுதியாக மாட்டார்கள்” என்பது பாரதியின் வாக்கு. சோதனைகளும் துன்பங்களும் துயரங்களும் மனிதனை வளர்ப்பனவேயாம்! நிலத்தில் அடிக்கப்படும் பந்து எழுவதைப் போல மனிதன் எழுந்து அயர்வில்லாமல் உழைத்தால் உயரலாம். இது உறுதி: இதுவே பாரதியின் தடம் !

பாரத தேச மக்கள் வீரியத்துடன் வளர வேண்டும்; வாழ வேண்டும். இது பாரதியின் ஆசை. பாரதி, பழைய வீரர்களின் பட்டியலைத் தருகிறான். அஃது ஒரு நீண்ட பட்டியல், அர்ஜுனன், இராமன், இராவணன், காந்திஜி பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பாரதி, வீரத்துக்குத் தரும் விளக்கம் என்ன? எடுத்த காரியத்தை இடையீடுகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து முடிப்பது வீரத்தின் இலக்கணம். இது பாரதியின் கருத்து.

பாரதி காலத்தில் இந்த இலக்கணத்திற்கு பொருந்தியவர்கள் பலர் வாழ்ந்தனர். அதனாலேயே நாடு விடுதலை பெற முடிந்தது. இன்று நாட்டில் இத்தகைய வீரர்கள் வாழ்கிறார்களா?

இடரே இல்லை; உயிரைத் தரவேண்டியது இல்லை. முறையாக வேலை செய்தாலே போதும். அதையே செய்யாமல் சோம்பலில் திளைத்துச் சிறு சிறு சுகங்களில் நாட்டங்கொண்டு அற்பத்தனமான ஆதாயங்களை எண்ணி கடமையைச் செய்யாமல் புறக்கணித்துப் பொழுது போக்குகிறவர்கள் ஏராளம்! ஏராளம்!

வீரர்களை ஞான வீரர், கர்ம வீரர் என்று பிரிக்கிறான் பாரதி. வசிஷ்டர், புத்தர், கிறிஸ்து ஞான வீரர்கள், சிவாஜி, நெப்போலியன், காந்திஜி கர்ம வீரர்கள்.