பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

245


பகவான். ஏன்? ஏசுவின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஞானமும் கூடிப் பிறந்த மெளனம் இம்மையிலும் வெற்றிகளைத் தரும். இன்ப அன்பு கலந்த அமைதியையும் தரும்.

பாரதி, பக்தி நெறியில் நம்பிக்கை உடையவன். ஒருவனுக்கு மெய் பக்தி உதயமானதும் அவன் எவருக்கும் எளியவனாய் எவற்றையும் நேசிக்கிறான்.

ஆகவே, அவன் எவருக்கும் அன்பு, தியாகம் அடிப்படையில் அடிமையாகிறான். அவன் எந்த உயிருக்கும் தொண்டு செய்தலை ஆர்வ விருப்புடன் செய்வான். தனக்கெனச் சிறிதும் பெருமை தேடாது எவருக்கும் பெருமை உண்டுபண்ணுகிறவன் எவனோ, அவனே, எல்லோரும் ஏத்திப் புகழும் ஈசுவரன், பெயருக்குத் தகுதியானவன்.

விருக்ஷம் தனது சுபாவத்தைக் காட்டியே வளருகிறது. நாம் எப்படி நடத்திய போதிலும் அது கவனிக்கிறதும் இல்லை; கவலைப்படுவதும் இல்லை. கிளைகளை வெட்டினாலும் கிளைத்து வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும் சுபாவத்தை விடுகிறதில்லை. இதுவே, பக்தியின் இலக்கணம்.

இந்த மாதிரிப் பக்தியின் வளர்ச்சி நாட்டுக்கு நல்லது. இன்று பக்தி, யாத்திரைகளாகவும் திருவிழாக்களாகவும் தண்ணீர் தெளிக்கும் விழக்களாகவுமே (கும்பாபிஷேகம்) அமைந்து வருகின்றன. பாரதியின் தடத்தில் பக்தி நெறி வளர்ந்தால் பாரதம் சிறக்கும்.

நம்முடைய தேசமானது இன்று பல அல்லல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் நாம் வாளா இருக்கலாமா? "கிராமத்திற்குக் கஷ்டம் வந்தால் குலத்தையும் விட்டுவிடு" என்று சொல்லியிருக்கவில்லையா?

நமது பாரத ஜாதிக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு பிரிவு! இது நீதியா? இந்தத் தாழ்த்தப்பட்டவர்களை நாமே நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டாமா?