பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முரசு கொட்டினான். சுதந்திரம் பெற்றால் மட்டும் போதுமா? சுதந்திர நாட்டைச் சுபிட்சமடைந்த நாடாக ஆக்கும் திட்டங்களைப்பற்றியும் எண்ணுகிறான். நம்முடைய அரசினருக்குத் திட்டங்களைப் பற்றிய கருத்தை தந்தவனே பாரதிதானோ என்று எண்ணுகிற அளவிற்குத் தொழில், பாரததேசம் என்ற கதைகளில் நாட்டு நலனுக்குரிய திட்டங்களின் நிறலையே தருகின்றான். எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் சமுதாயத்தை முதலில் தயார் செய்தாக வேண்டும் சமுதாயத்தை எப்படித் தயார் செய்வது? அடிமை வாழ்வில் இந்நாட்டு மக்கள் ஆட்சியுரிமையை மட்டுமா இழந்தார்கள்? அறிவையும் இழந்தார்கள். கம்பன் என்றும் காளிதாசன் என்றும் மாகவிஞர்கள் பிறந்து வளர்ந்த நாட்டிலே, எங்கும் அறியாமை. ஏடெடுத்தால் படிக்கத் தெரியாது. எழுத்தாணி எடுத்தால் எழுதத் தெரியாது. ஆனாலும், ஏடடுக்கிப் பூசை செய்யத் தவறில்லை. அதே நேரத்தில் அறிவின் தெளிவாலே பூத்துக் குலுங்க வேண்டிய சமய நெறிபற்றி நிறைய நம்பிக்கை. நம்பிக்கை நல்லதுதான். ஆனால், அங்கே தெளிவில்லை. தெளிவின்மையால் உறுதியில்லை, தெளிவும் உறுதியும் இன்மையால் தேர்ந்த அனுபவமில்லை. ஆயிரம் ஆலயங்கள் எடுப்பர். ஆனாலும் அங்கே ஆத்ம ஞானம் இருக்காது. அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவர். ஆனால் அங்கே ஆண்மை இருக்காது. வயிற்றுக்குச் சோறிடுவார். ஆனால் வாழ்வுக்கு ஞானம் தர மறந்தார்கள். இந்நிலை கண்டு பாரதி கொதித்தெழுந்தான்.

"அன்ன சத்திரம் மாயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் கட்டல்
அன்னயாவிலும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்."

என்று கொள்கை முழக்கம் செய்தான். அத்தோடு நின்றானா? சாத்திரத்திலும், ஞானத்திலும் பிறந்து வளர்ந்த சமுதாயம் அறியாமையில் சிக்கி உழல்வது கண்டு, ஆத்திரம்