பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்களுக்கேயாம். எல்லையற்ற பரம்பொருளின் ஆற்றலை சக்தி என்று கூறுவது தமிழர் மரபு. எல்லையற்ற பரம்பொருளுக்குச் சிவம் என்ற பெயரைத் தமிழர்கள் சூட்டினர். சிவத்தின் சக்தி அம்மை, நெருப்புக்குச் சூடுபோல் சிவத்திற்குச் சக்தி, இன்றைய அறிவியல் உலகத்தில் பொருளையும் (Matter) பொருளின் ஆற்றலையும் (Energy) தனியே பகுத்துக் காணும் மரபு வளர்ந்திருக்கிறது. இம் முறையில்தான் பண்டைத் தமிழர்கள் சிவத்தைப் பொருளாகவும் அம்மையைப் பொருளின் ஆற்றலாகவும் கண்டு போற்றினர்; வழிபட்டனர். அம்மை வழிபாடு ஆற்றலை வழங்கும். ஆற்றல் நிறைந்த மனித சமுதாயம் நல்லனவற்றைப் படைக்கும் ஆற்றலுடையதாகவும், தீயனவற்றை அழிக்கும் ஆற்றலுடையதாகவும் விளங்கும்.

வாழ்க்கையென்பது நொய்மையுடையதன்று. ஆற்றல் மிக்குடையதாக அமைய வேண்டும். செத்து மடிவது வாழ்க்கையின் நோக்கமன்று. வாழ்க்கை, ஆக்கத்தின் பாற்பட்டதாக அமைய வேண்டும். வாழ்க்கை பொய்யன்று; புழுக்கூடுமன்று. துன்பச்சுமையுமன்று. வாழ்க்கை அருமையுடையது; ஆற்றலுடையது. இசை போன்ற இன்ப அமைப்பு உடையது. வாழ்க்கை அறிவுத் தன்மையுடையது. உயிர்க்கு இயற்கை, அறிவுடைமை, ஐயோ, பாவம் ! சுற்றுச் சூழ்நிலைகளால் உயிர், தான் பெற்றிருக்கும் இயற்கையறிவை இழக்கிறது. உயிர் வாழ்க்கை ஆற்றல் மிக்குடையது. ஆனாலும் அவலத்தால் அழிகிறது. மானுடப் படைப்பு சோற்றுக்கும் தண்ணீருக்குமாக ஏற்பட்டதன்று. அஃதொரு புகழ்பூத்த படைப்பு. ஆம்! இறைவனின் ஐந்தொழிலுக்குத் துணையாக அமைந்த படைப்பு. படைப்பாற்றலுடையதாக அமைந்த பிறப்பு. மானுடப் பிறப்பு. ஆனால் எத்துணைபேர் இப்படி வாழ்கிறார்கள்? அவரவர் வயிற்றுக்குச் சோறு தேடுவதிலேயே இன்னும் வெற்றி பெறவில்லையே! எப்படி வெற்றி பெறமுடியும்? ஒவ்வொரு மனிதனும் அவனைப் பற்றியே