பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பட்டவர்கள் ஊனைப் பெருக்கிக் கொழு கொழுவென்று வளர்த்து ஊதுடலை உயிர்க்குச் சுமையாக்கி எய்த்துக் களைத்திடச் செய்வர். ஐயகோ! அவர்களின் உயிர் சிறுத்துப் போய் உடலுக்கு அடங்கி நடப்பர்; உடற்பொறிகளின் மீது உயிரறிவு ஆணை செலுத்தாது; பொறிகள் உயிரை ஆட்டிப் படைக்கும். முடிவு, நோய்க்கு விருந்து! இகழ்வின் சின்னம் ! நிலத்திற்குச் சுமை! ஆதலால் பாரதி, அடிக்கப்படும் பந்து விரைந்து எழுதல் போல, உள்ளத்திற்கு இசைந்தவாறு இயங்கும் உடல் வேண்டுகிறார்.

மனம்! - அது ஒரு புதிர். அதை தன்முறையில் பழக்கினால் அதற்கு இணையான துணை வெறொன்றில்லை. ஆனால், இயல்பில் மனம் ஆசைப்படும். ஆசையென்பது நோக்கம் இல்லாதது; நிர்வாணமான துய்த்தல் வழிப்பட்டது. தன்னைப் பற்றியே வட்டமிடும் உணர்வுக்கு ஆசையென்று பெயர். இத்தகு மனம் உயிரை அலைக்கழிக்கும். ஆதலால், பாரதி ஆசையற்ற மனம் கேட்கிறார். உயிர், நாள்தோறும் புதிய புதிய உணர்வுகளால் ஒளிபெற்றுத் திகழவேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

     "..........நித்தம்
     நலமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்"

என்பார் பாரதி.

துன்பங்கள் இயற்கை. அவை மிகுதியும் உடலைச் சார்ந்தவை. உடல் சுடப்படுவதால் உயிர்க்குத் தீங்கு வரப் போவதில்லை. அதுவும் ஆற்றல் மிக்க அன்னையைப் பாடிக் களித்துப் பரவிடும் உயிர்க்கு எம்மட்டு? என்ன செய்யும்? அறிவு வேண்டும்; அந்த அறிவும் உறுதியானதாக இருக்க வேண்டும்; மானிட வரலாற்றில் உறுதியானதாக இருக்க வேண்டும். மானிட வரலாற்றில் அறிவில்லாமல் கெட்டவர்கள் மிகக்குறைவு. ஆனால் அறிவு பெற்றிருந்தும் அதில் உறுதியும் கடைப்பிடிப்பு இல்லாமல் கெட்டவர்களே மிகுதி.