பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் சிந்தனைகள் - I

257


கணக்கற்ற மதங்கள் இருந்தன. முதன் முதலாக பாரதி சாதி, மத வர்க்கங்களைக் கடந்த ஒன்றுபட்டு நின்ற பாரத சமுதாயத்தைக் காண்கிறான்! படைக்கிறான்! பாரதி காலத்தில் பாரதியால் பாரத சமுதாயம் படைக்கப் பெற்றது. ஆயினும் பாரதி கண்ட சமுதாய அமைப்பு உருவாயிற்றா? நிலைபெற்று விளங்குகிறதா? இன்றும் பாரதி கண்ட சமுதாய அமைப்பு உருக்கொள்ள மறுக்கிறது. எங்கும் மொழி, இனம், சாதி, மத அமைப்புகள்! அவ்வழிக் கலகங்கள்! பொது நலன்கள் புறக்கணிக்கப் படுகின்றன. "நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்” என்று பாரதி கூறிய வழியில் பாரதம் செல்லவில்லை! இன்று போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே தேடவேண்டிய அவசியம் வந்து விடும்போல் தெரிகிறது.

பாரதி காலத்தில் நமது நாட்டின் மக்கள் தொகை முப்பது கோடி! இன்று மக்கள் தொகை பல கோடியாகப் பெருகி வளர்ந்துள்ளது. பாரதி, பாரத நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே சமுதாயம் என்று கூறுகிறான், பாரதி விரும்பிய சமுதாயம் உருக் கொண்டதா? பாரதியின் எண்ணம் நிறைவேறியதா? சமுதாயம் என்ற அமைப்பு எளிதில் உருவாவதில்லை. தன்னயப்புள்ள மனிதர்கள் தன் முனைப்புள்ள மனிதர்கள் சமுதாயம் உருவாகத் தடையாக இருக்கின்றனர். கூட்டம் வேறு; கூடி வாழ்தல் வேறு. சமுதாய அமைப்பில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொறுப்பும் கடமையும் உரிமையும் உறவும் உடையவர்களாக விளங்குபவர். ஒருவர் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும் என்கிற வாழும் முறைமை சமுதாய அமைப்பில் நிலைபெற்று விளங்கும்.

பாரத சமுதாயத்திற்கு ஏற்று தனியுடைமைச் சமுதாயமல்ல. பொதுவுடைமைச் சமுதாயமே என்று பாரதி எண்ணிப் பாடியுள்ளான்.