பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
மகாகவி பாரதியாரின்
சிந்தனைகள் - II

இந்தியா ஒரு வளமான நாடு. இயற்கை வளங்களும் தாதுப் பொருள்களும் நிறைந்த நாடு. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நூறாயிரம் பிரச்சினைகள், பின்னடைவுகள் இருப்பினும் இவற்றையெல்லாம் கடந்து நாடு திட்டமிட்ட திசையில் வளர்ச்சி பொருந்திய வழியில் நடந்து வந்திருக்கிறது. நாட்டில் பசுமைப் புரட்சி நடந்தது. ஆலைகளும், தொழிற்சாலைகளும் தோன்றின, நாடு, உணவில் தன்னிறைவு அடைந்தது. ஆயினும், நாட்டின் வருவாய் உயர்ந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் கூடவில்லை, ஏழை பணக்கார ஏற்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. செல்வர்கள் மேலும் செல்வர்கள் ஆயினர்; ஆகிக் கொண்டுள்ளனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆயினர்; ஆகிக் கொண்டுள்ளனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் அவல நிலையே வளர்ந்து வருகிறது.

"மனிதர் உணவை மனிதர் பறித்தல்” என்ற பாரதியின் வாக்கு ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. மனிதன் கூடி வாழப் பிறந்தவன்; கூடி உண்ணப் பிறந்தவன். இந்த உலகில்