பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏராளமான உணவுப் பண்டங்கள் உள்ளன. எல்லாரும் உண்டு வாழப் போதும். ஆனால், மனிதனின் ஆசை விட்ட பாடில்லை. தனக்கென்று வாரிக் குவித்துக் கொள்வதால் இலர் பலர் ஆயினர். அவன் ஏன் இப்படிக் கெட்டுப் போனான்?

மேலும் பாரதி "மனிதர் நோக மனிதர் பார்க்கும்" வாழ்க்கையை வெறுக்கிறான்; மறுக்கிறான். இதுவரையில் இப்படி வாழ்ந்தது போதும்! இனிமேலும் இந்த அசுர வாழ்க்கை வேண்டாம் என்கிறான். மனிதர் உணவை மனிதர் பறித்து வாழ்தலும், மனிதர் நோக மனிதர் பார்த்து வாழ்தலும் அறிவற்ற வாழ்க்கை என்று திட்டுகிறான். புலனில் வாழ்க்கை என்று ஏசுகிறான்.

மனிதர் நோக மனிதர் பார்த்து வாழும் பாழ்பட்ட வாழ்க்கை ஏன் தோன்றியது? பாரதி அதன் காரணத்தைக் கண்டு பிடித்து மாற்ற விரும்புகிறான். விதி நம்பிக்கைக் கொள்கை வந்த பிறகுதான் இந்த அவலம் கால் கொண்டது. ஒருவர் துன்புறுவதற்கு விதியே காரணம்! அந்த விதியை மாற்ற யாராலும் இயலாது என்ற மூடக் கொள்கை வளர்ந்ததால்தான் இந்திய மக்கள் எழுச்சியை இழந்தனர்; தன்னம்பிக்கையை இழந்தனர். அறிவியல் சார்ந்த விழிப் புணர்வை இழந்தனர். வாழ்க்கை மாறாது. அதனை மாற்றவும் இயலாது என்ற நம்பிக்கைக்கு வந்து விட்டனர். பாரதி இந்த விதிக் கொள்கையைப் புதுப்பிக்க விரும்பினானன். எனவே,” இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்!” என்றான்! பாரதி விரும்பிய விதி என்ன?

"இனி ஒரு விதி செய்வோம்! அதை
எந்த நாளும் காப்போம்'
தனி ஒருவனுக் குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”