பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்த்திருக்கிறான்! அதனால், மன்னர்களின் மகுடங்களில் பாரதிக்கு இருந்த ஆசை அகல வில்லை! இந்தியர்க்ள எல்லோரையுமே இந்தியாவின் மன்னர்கள் ஆக்குகிறான்! இந்தியர்களுக்கு பாரதி அளிக்கும் மன்னர் பதவி அதிகாரப் பதவியல்ல. மன்னர் பதவி நிலை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மேலை நாடுகளில் மன்னர் பதவி அதிகார பீடம்! சுகபோகமுள்ள பதவி, இந்தியாவிலோ அப்படியல்ல.

"மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்"

என்று செங்குட்டுவன் வாயிலாக இளங்கோவடிகள் கூறுவதை எண்ணுக. இந்தியாவில் மன்னர்கள் மக்களின் நலம் காக்கும் சேவகர்கள். இந்தியாவை வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உள்ள மன்னர் பதவி! மன்னர் என்றவுடன் முடியைத் தேடாதீர்! மூளையைத் தடவுங்கள்! அறிவுக் கிளர்ச்சியுடன் அறிவறிந்த ஆள்வினையுடன் இந்தியாவை வளர்க்க, காக்கப் பணி செய்வீர்! இந்தியாவின் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! மேலும் வளர்ப்போம்! எல்லாருக்கும் எல்லாம் என்ற இடம் நோக்கி இந்த பாரதத்தை நடத்துவோம்! இந்தியாவில் பட்டினிச் சாவு இல்லை என்ற புகழ்ப் பரணி பாடுவோம்! இந்தியாவில் எவரும் அமர நிலை எய்த முடியும்! இந்தியர்கள் அனைவரும் ஒரு குலம்! இந்தியாவில் அனைவரும் ஒரு விலை! அனைவரும் இந்நாட்டு மன்னர்! வாழ்க இந்தியா.