பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


'தனியொருவனுக்கு உணவிலை எனில்,
சகத்தினை யழித்திடுவோம்'

என்றார். தனியொருவனுக்கு என்று பாரதியார் கூறுகிறாரே, அந்தத் தனியொருவன் யார்? அமைச்சரா? அதிகாரியா? பெரிய மனிதரா? அத்தகையவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை வராது; சமுதாயத்தில் வாயும், கையும் உள்ளவர்கள் என்றும் எப்படியும் வாழ்ந்து விடுவார்கள். வாயும், கையும் இல்லாமல் சக்தியற்று மூலையிலே ஒதுங்கிக் கிடக்கின்ற ஒருவனைத்தான் பாரதி தனியொருவன் என்றார். உதைத்துக் கேட்பவனுக்கும்-தட்டிக் கேட்பவனுக்கும் கொடுக்காதவர்களும் கொடுத்துவிடுவார்கள். இதைத்தான் திருவள்ளுவர்,

'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு'

என்றார்.

உள்ளத்தில் எழும் உணர்ச்சியை ஒழுங்குபடுத்திகேட்பவர் மனத்தில் நன்றாகப் பதியும்படி-அதைக் கேட்பவர்களும் அந்த உணர்விலே தோயும்படி இருந்தால் அது கவிதைதான்-இலக்கியம்தான். இசைத் தமிழ் வேறு. இலக் கியம் வேறு என்றால், தேம்பாவணி, இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின் திருப் பதிகங்கள் ஆகியவற்றை எதிலே சேர்ப்பது?

பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறதா என்றால், பாரதியின் மரபு வளர்ந்திருக்கிறதா? பாரதி சொன்னதை விமரிசனம் செய்து சொல்லும் திறமை வளர்ந்திருக்கிறதா? என்றுதான் பார்க்கவேண்டும். பாரதியிடத்திலே நற்சான்று பெற்ற கவிஞர் புரட்சிக்கவி பாரதிதாசன். யாமறிந்த புலவரிலே-என்ற பாரதியின் கருத்தை வைத்து-அதன் விளக்கமாக-பாராட்டாக பாரதிதாசன் பாடியிருக்கிறார். நாவின் சுவையும், வயிற்றுச் சுவையும் மிகுதியும் உடைய மக்கள் வாழ்கின்றார்கள் என்பதையுணர்ந்த பாரதிதாசன்,