பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
தலைவர்களுக்குப் பாரதி காட்டும் வழி

பாரதியார் ஒரு மகாகவி. தமது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் பேராற்றல் படைத்தவர். அவர் உள்ளத்து உள்ள உண்மை ஒளியே கவிதைகளாக மலர்கின்றன. அவர் பாடல்கள் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன, கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேசப்பற்றையும், தெய்வப்பற்றையும், கவிதை இன்பத்தையும் ஊட்டுகின்ற கவிஞர் அவர். பாரதியார் சிறந்த கவிதைத் தச்சர். ஒப்பற்ற சீர்திருத்தச் சிற்பி. அழுத்தமான தெய்வ பக்தர். வாய்மையும் நேர்மையும் பொருந்திய சமுதாயத்தின் வழிகாட்டி. சமுதாயத்தை வளம்படுத்த வந்த மாபெரும் தலைவராகிய பாரதியார், தலைவர்களாக உள்ளவர்களுக்கும் நல்ல வழி காட்டுகிறார். .

பாரதத் தாயின் அடிமை நிலையினை அகற்ற முயன்ற முன்னையோரில் முதல்வர் தாதாபாய் நவுரோஜி, அறிவும், திறனும், அன்பும், உறுதியும் படைத்த வீரத்தலைவர். அவர். விற்போரில் வெற்றிகொள்ள நினைப்பது பயனற்றது எனக் கருதிச் சொற்போரால் தொண்டாற்றியவர், எல்லாவற்றிற்கும் மேலாக சீர்மை பொருந்திய ஒரு பண்பை அணிகலனாகக் கொண்டவர். அது என்னவென்றால்,