பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் இலட்சியம்

279


தேசீயமும் தேவை. அவை இரண்டும் உயிரும் உடலும், கிணறும் நீரும்போல, எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று மிகுதி குறைவு கூற முடியாத அளவுக்கு இரண்டும் ஒத்த நிலையில் இருக்க வேண்டும். பாரத தேசியத்தில் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் வேண்டும் என்கிறான் பாரதி.

இராமேசுவரத்தில் இருப்பவர்கள் காசிக்கும், காசியில் இருப்பவர்கள் இராமேசுவரத்திற்கும், போவது பழக்கமாகி விட்டது. ஆகவே தமிழ்த் தேசியத்தைக் கடந்த பாரத தேசியம் தன்னியல்பாக மொழி, கலை, சமயம் முதலிய நாகரிகங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய குழந்தைகள் நல்ல தமிழர்களாகத் தமிழ் நெஞ்சத்தோடு வாழவேண்டும். அதே நேரத்தில் பாரத நாடு நம் நாடு. நாம் அனைவரும் பாரத நாட்டு மக்கள். 40 கோடி பேரும் குடும்பத்து மக்கள்-ஒரு கும்பத்தைச் சேர்ந்தவர்கள்-ஒரு சமுதாயம் என்ற தேசிய எழுச்சி மிக்க உணர்ச்சியோடு வாழவேண்டும். இந்த நாட்டு இனத் தலைமுறையினருக்கு இந்த இரு எண்ணங்களும் வரவேண்டும்-அவர்கள் உள்ளத்தில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

"பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு”

என்று பாடினான் பாரதி.

பாரத தேசியத்தைத் தழுவிய தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியத்தை அணைந்த பாரத தேசியம் இவைகள்தான் பாரதி கண்டார். அவர் கண்ட பாரத தேசியம் தமிழ்த் தேசியங்களுள் முரண்பாடு இல்லை. அவற்றுள் முரண் பாட்டை அவர் பார்க்கவும் இல்லை-முரண்பாடு இருக்கவும் முடியாது.