பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இது கருத்துப் பிழையல்லவா? எனவே காலங்கடந்ததல்லவா என்கின்றனர்.

ஆதிசிவன் என்பதை அப்படியே வைத்துக் கொண்டு பார்த்ததால் வந்த பிழை. அதன் உண்மைப் பொருள் என்ன? சீவன் என்ற சொல் சிவன் என்று திரிந்து வந்துள்ளது. பாடலில் சொற்களை எற்ற இடங்களில்-இன்றியமையாத இடங்களில் நீட்டியும் குறைத்தும், திரித்தும் வழங்குவது என்பது இலக்கணமும் ஏற்றுக் கொண்ட நெறி-மரபு ஆகும். வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுளுள் வேண்டும் என்பது இலக்கணம். எனவே சீவன் என்பது பாடலின் சந்த ஒட்டம் தடைப்படா திருப்பதற்காகச் சிவன் என்று வந்துள்ளது. சீவன்-மனிதன் பெற்றெடுத்ததுதானே மொழி? இந்தக் கருத்தில் எங்ங்ணம் வேறுபாடு கொள்ள முடியும்?

"தோன்றக் கூடியன வெல்லாம் மாறக்கூடியன" என்பது மார்க்ஸ்சின் சித்தாந்தம். காரல்மார்க்ஸ்சின் கொள்கைப்படி, தோன்றியது மாறுமானால்-அழியுமானால் சுதந்திர வேட்கையின் காரணமாக-சுதந்திரம் பெறுவதற்காக எழுதப்பற்ெற தேசியப் பாடல்கள் அழியக்கூடியன-காலங் கடந்ததுதானே என்று விவாதிக்கின்றனர். உலகில் தோன்றிய எந்தப் பொருளும் நிலைப்பதில்லை என்பது உண்மை.

நிலைத்தல் வேறு. மாறுதல் வேறு. தோன்றிய பொருள்களிடையே மாறுதல்-வளர்ச்சி உண்டு. பிறந்தது போன்று நிலைத்து நிற்றல்தான் இல்லை. பிறந்தது அப்படியே இல்லாது வளரும், மாறும். மாற்றம் அழிவல்ல, வளர்ச்சியே ஆகும்.

உலகில் தோன்றிய எல்லாம் அழிவன என்ற கொள்கை இடைக்காலச் சமயத்தில் சில சுயநலவாதிகளால் புகுத்தப்பெற்ற கொள்கை அது தவறு. மாற்றம் உண்டே தவிர அழிவில்லை.