பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

291


சீனர்களது படையெடுப்புக்காகப் பாரதியே வந்து பாடியதைப் போல மிளிர்கின்றன. அவை.


"வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்
செய்கின்றார்”
"தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வும்ஓர் வாழ்வுகொல்?"
"தாய் திறன் கைபடச் சகிப்பவனாகி
நாயென வாழ்பவன் நமரில் இங்குளனோ?”


-என்பனவும்


"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ'
"கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?”
"இன்பச் சுதந்திரம் நின் இன்னருளால் பெற்றதன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப் பறித்தால் காவாயோ?

என்பன போன்ற பாடல்கள் சீனர்களுக்காவே பாடப் பெற்றன போலப் புத்துருவம் பெற்று மிளிர்ந்து பாரத மக்களிடையே விழிப்பூட்டி எழுச்சியுறச் செய்வனவாகும். சீனர் படையெடுத்துள்ள இந்நேரத்தில் மக்களிடையே ஏற்றமிக்க எழுச்சியூட்டும் பாரதியின் பாடல் வேண்டாவா? வேண்டும் வேண்டும் வேண்டும். முக்காலும் (மூன்று முறை) வேண்டும் என்றுதான் உள்ளம் முரசறைகின்றது.

எனவே நாட்டு ஒற்றுமையைப் பேணுகின்ற-அறத்தின் சிறப்பை வற்புறுத்துகின்ற-கொள்கையிற் பிரிந்தவனை இகழாதே என்று ஆணை இடுகின்ற-உணவு கொடுத்துக் காத்துப் புதுவிதி படைக்கக் குரல் எழுப்புகின்ற-கண்ணிர் விட்டுக் காத்த சுதந்திரத்தைச் சீனரிடம் பறிகொடுக்காது காத்து நிற்குமாறு ஆணையிடுகின்ற பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தவை அல்ல-அல்ல-அல்ல.