பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13
பாரதி வலியுறுத்துவது எது?

ஒரு நாட்டு மக்கள் எத்தகைய நூல்களைப் போற்றுகிறார்களோ அதைக் கொண்டே அந்த நாட்டின் எதிர் காலம் அமையும். ஒரு நாட்டின் நிலை மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கருத்துப் புரட்சி இன்றியமையாதது. கருத்துப் புரட்சி மட்டும் இல்லையானால், அந்த நாட்டில் ஒடுகின்ற ஆற்றாலும், உயர்ந்தெழுந்து நிற்கின்ற மலைகளாலும், அங்குள்ள இயற்கை வனங்களாலும், அணக்கட்டுகளாலும், பிறவற்றாலும் உரிய பயன் கிடைக்காது.

நமது தமிழ்மொழி இலக்கிய வளமும், நாகரிகமும் செறிந்து விளங்கும் மொழி. கருத்தாலும் காலத்தாலும் மிகமிக மூத்த மொழி. 2 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே திருவள்ளுவர் பெரும் புரட்சி செய்ய நினைத்தார். அதற்காகவே திருக்குறளை எழுதினார்.

இந்த நாடு அந்நியர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பாரதி தோன்றினார். பாரதி அடிமையாகப் பிறந்தார். அடிமையாக வாழ்ந்தார். அடிமையாகத்தான் இறந்தார். ஆனால் அவர் விடுதலையைச் சிந்தித்தார் விடுதலைக்காகப் பாடினார்-விடுதலையைப் பாடினார்.