பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைவர்களுக்குப் பாரதி காட்டும் வழி

19


மறைந்தொழிந்தமையே இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டும். மகாகவி பாரதியின் இந்தத் தன்னல மறுப்பு உபதேசம் அரசியல் தலைவர்களுக்குமட்டுமல்ல. அதனால் சமுதாயம், சமயம், அறநிலையங்கள், மடாலயங்கள், முதலியவற்றின் தலைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. துறவியினுடைய இலட்சணம் இவ்வுலகப் பொருள்களிடத்துப் பற்றின்றி வாழ்தலேயாம். ஆனால் தன்னைச் சார்ந்துள்ள தன் நாட்டிலுள்ள மக்களை மறத்தல் அல்ல. அறிவும், ஒழுக்கமும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்கள் நலம்பெற வாழ வழிகாட்டிப் பணி செய் வதையே கடமையெனக் கொண்டவர் துறவிகள் என்பது கதே என்ற தத்துவ ஞானியின் அறிவுரை. "ஞானிகள் முயல வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று; - உலகத்தை அறியவேயாகும்” என்பது அவர் மொழி, ஈண்டு உலகம் என்பது மக்களையே குறிக்கின்றது. உலக மக்களின் நிலையறிந்து, தேவையறிந்து அவர்கள் வளர வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறான் ஒரு உண்மையான துறவி. அதையே பாரதி "பிறர்க்கன்றித் தனக்குழையாத் துறவியா வோன்” என்று சொல்லி விளக்குகின்றார். இத்தகைய துறவிகள் இந்த நாட்டில் பெருகுவார்களானால், இம் மண்ணுலகமே விண்ணுலகமாய் மாறிவிடும்.

சில இடங்களில் பாரதியார் ஆண்டவனை நோக்கிச் செய்யும் தமது பிரார்த்தனையின் மூலம் தலைவர்களுக்கு சிறந்த வழியைப் புகட்டுகிறார். பாரதியார் தமது சுயசரிதையைப் பாடி முடித்த பின்பு இறுதியாகப் பரம் பொருளிடம் ஒருசில வேண்டுகிறார். அவற்றைப் பார்ப்போம்.

“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே
அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெலாம்
நினது பேரருளின்