பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல்,
என்றிவை அருளாய்:
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு
தனிப்பரம் பொருளே"

கலக்கமற்ற அறிவு, சபலமற்ற நெஞ்சு அன்பு நிறைந்த உள்ளம், பொறிகளை அடக்கியாளும் ஆற்றல், இறைவன் திருவருள் நெறியினை மறவாத நோக்கம், இடையறாப் பணியில் ஈடுபாடு இவற்றையெல்லாம் ஆண்டவனே எனக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார் பாரதி. அதாவது, இவை யெல்லாம் ஒரு தலைவனுக்கு இன்றியமையாது வேண்டப் படுபவை என்று அறிவுறுத்துகிறார் நவயுகத் தலைவர் பாரதி. இன்னும் ஒரு தலைவனுக்குவேண்டிய ஒரு குணத்தையும் வெளிப்படுத்துகிறார். அது பகைமை உணர்ச்சியாகும். ஒரு தலைவன் எதைப் பகைக்கவேண்டும் என்பதை மாஜினியின் மூலமாக உணர்த்துகிறார்.

"தீயனபுரிதல், முறைதவிர் உடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற்று என்னெஞ்சு இயற்கையின்
எய்தும் அரும்பகை"

தீமையையும், அநியாய உடைமையையும், கொடுங் கோலையும், அநீதியையும் கண்டால் ஒரு உண்மைத் தலைவன் இயல்பாகவே அதன்மீன் கோபங்கொண்டு அதை அழிக்கக் கொதித்து எழுவான் என்ற உண்மையையும் நன்கு வெளிப்படுத்துகிறார் பாரதி. மேலும் மனித உள்ளத்திலே பெரும்பாலாகத் தோய்ந்துகிடக்கும் சில தீமைகள் ஒழியவேண்டும் என்றும் வேண்டுகிறார்.

"மதிமுடும் பொய்மை யிருளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்;