பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

311


வாழ்வியலுடன் பொருந்தாத எந்தத் தத்துவமும் உலகத்தின் முன் நிற்காது. பாவேந்தன் கொள்கைகள்-கோட்பாடுகள் வாழ்விற்கென்றே பாடம் பெற்றன. ஆம், மரத்துப் போன தமிழினம் வழக்கம் போல் பாரதிதாசனையும் ஏமாற்றவே நினைக்கிறது. பாரதிதாசன் நம் தலைமுறையில் வாழ்ந்த கவிஞன்! அவன் ஒரு குயில். இந்தக் குயிலின் ஓசை கேளாத காதுகள் இல்லை; புதுவையின் குயில்தான்! ஆனாலும் ஆவேசமும் இருந்ததை மறந்துவிட இயலாது. ஆனால் பாவேந்தன் பாரதிதாசனுக்கு அவன் நூற்றாண்டு விழாக் காலத்தில் விழாக்கள் எடுக்காதீர்கள். செயல்திட்டம் தீட்டுங்கள்; போராட்டக் களங்கள் அமையுங்கள்; போராடுங்கள். பாவேந்தன் பாரதிதாசனின் கவிதைகள், தமிழர் வாழ்வாக உருக்கொள்ள வேண்டும். பாவேந்தன் வலியுறுத்திய சமுதாய அமைப்பைக் காண்பதே பாரதி தாசனுக்கு உண்மையான பாராட்டு!

இன்றைய சமுதாயம்


பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது தங்களுடன் கலந்து சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்பு, "பாரதிதாசன் கண்ட சமுதாயம்” என்பதாகும். பாவேந்தன் மன்னர்களைப் பாடவில்லை; கடவுளைப் பாடவில்லை; மானுடத்தையே எண்ணி மானுடத்தின் உயர்வுக்கே பாடியவன். ஆதலால், அவன் கண்ட சமுதாயத்தைப் பற்றிச் சிந்திப்பது பயனுடையதாக அமையும். மானுடம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஏன் இன்னமும் மானுடம் ஒரு சமுதாயமாகத் தம்மை அறிவார்ந்த நிலையில் உருவாக்கிக் கொள்ள வில்லை? இன்றைய மனிதக் கூட்டம் காடுகளைப் போன்று விளங்குகிறது. காடுகள் தன்னிச்சைப் போக்காகவே வளரும். காடுகளில் ஒழுங்கு இராது; நெறிமுறை இராது. அருவருக்கத் தக்க போட்டிகள் இருக்கும். வல்லாண்மையுடைய மரங்கள்