பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வல்லாண்மை இல்லாத தாவரங்களை அழித்துவிடும். இன்றைய மனிதக் கூட்டமும் அப்படித்தானே இருக்கிறது! எங்கும் மனிதன் தன்னிச்சைப் போக்கையே விரும்புகின்றான். ஒழுங்குகள்-ஒழுக்கங்கள் ஆகியவற்றிடம் மக்களுக்கு நாட்டமில்லை. கையூட்டு தேசீய மயமாகி விட்டது; பழக்கமாகி வழக்கமாகிவிட்டது; வல்லாண்மையுடையோரே வாழ்க்கின்றனர்; நாட்டின் செல்வத்தை, கையடியும் வாயடியும் செய்து அள்ளிக்கொண்டு போகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். நமது நாடு வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி உண்டு. இந்தியா ஏழை நாடல்ல; இந்தியர்களே ஏழைகளாக இருக்கிறார்கள். நாட்டின் செல்வத்தை மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினாரே எடுத்துக் கொள்கின்றனர். 80 விழுக்காடு மக்களுக்கு 20 விழுக்காடு செல்வம்தான் கிடைக்கிறது.

‘’Two little for too many" என்றாகிறது மதங்கள் ஏழைகளுக்கே கீதோபதேசம் செய்கின்றன. இன்றைய மனிதக் கூட்டம் பழத் தோட்டங்களை போல மாறி வளர்ந்து உருப்பெற்றால்தான் மானுடம் வளரும். பழத் தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும். நெறிமுறை இருக்கும். ஒன்றையொன்று சார்ந்து உடன்பாட்டு நிலையில் உத்தரவாதத்துடன் பழமரங்கள் வளரும்; வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் உண்டு; போட்டி இல்லை. ஆக்கிரமிப்பு இல்லை. அழிக்கப்பட வேண்டுவன மட்டுமே அழிக்கப்படும். இப்படி மனித சமூகம் அமைதல் வேண்டும். இத்தகு சமுதாயம் உருவாக பாரதிதாசன் காட்டும் வழி என்ன? நாம் செய்ய வேண்டுவது என்ன? என்பதே இந்தப் பேச்சின் குறிக்கோள்.

மானுடம் வரலாற்றுக் காலத்திற்கு முன் சிறப்பாக வாழ்ந்துள்ளது. பாரதிதாசன் வார்த்தைகளில் கூறுவதானால் "அரசு கடந்து" வாழ்ந்துள்ளது. காலப்போக்கில் மானுடம்