பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பரந்த-விரிந்த நிலவுலகில் எல்லைகள் தோன்றின! வேலிகள் அமைக்கப் பெற்றன! மானுடத்தின் பொதுமை சுருங்கிற்று!

இதனை பாவேந்தன் பாரதிதாசன்.

"வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்"

என்பான். ஆம்! பிறப்பில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்: ஒன்றுபட்டு வாழ வேண்டியவர்கள். உடைமைப் பற்று - தனியுடைமை நஞ்சு உறவைக் கெடுத்துவிட்டது! தாயிற் சிறந்த அன்பையும் கெடுத்துவிட்டது! எங்கும் பிறர் பங்கைத் திருடி வாழும் ஏமாற்றுக் கூட்டம்! ஏமாற்றும் சூதாடிகளுக்கு அரண் செய்யும் மதப்புரோகிதர்கள்! ஆளுநர்கள் ! ஐயகோ! இந்த இருட்டறையிலிருந்து வெளிச்சத்திற்கு மக்கள் என்று வருவர்?


தனியுடைமை

மக்கட் சமுதாயத்தில் தனியுடைமைச் சமுதாய அமைப்பு கால்கொண்டவுடன் அந்தத் தனியுடைமைச் சமுதாய அமைப்பினைக் கட்டிக் காப்பாற்றச் சாதிகள் உருவாக்கப் பெற்றன; மதங்கள் உருவாகின; பின் அரசுகள் தோன்றின. சுரண்டும் தன்மை வாய்ந்த, பிறர் பங்கைத் திருடும் சமுதாய அமைப்புத் தோன்றியதிலிருந்து நீதி நூல்கள், அரசியல் சட்டங்கள் முதலிய அனைத்தும் சுரண்டும் வர்க்கத்திற்குச் சாதகமாகவே அமைந்துள்ளன. சான்றாக ஒன்று. ஒரு பெட்டிக் கடையில் சில ரூபாய் விலை மதிப்புள்ள பொருள்கள் திருடு போனால், அதுபற்றி வழக்குத் தொடுக்க குற்றவியல் சட்டத்தில் இடமுண்டு. அதேபோழ்து ஒரு சாதாரண இரும்புத் துண்டைத் தன்னுடைய உழைப்பால் விலைமதிப்புடைய பொருளாக்குகின்றான் ஒருவன். மனிதனின் உழைப்போடு தொடர்பு கொள்ளாத பொருளின் மதிப்புக்கும் உழைப்போடு தொடர்பு கொள்ளாத பொருளின் மதிப்புக்கும், உழைப்பால்