பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைவர்களுக்குப் பாரதி காட்டும் வழி

21


"ஐயம்தீர்ந்து விடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்”

என்று சொல்லி, "உன்னைக் கோடி முறை தொழுதேன். இனி வையத்தலைமை எனக்கருள்வாய்” என்று வேண்டுகிறார். "அச்சம் கீழ்களது ஆசாரம்” என்று வள்ளுவர் பேசுகிறார். அச்சமும் சந்தேகமும், அதாவது நம்பிக்கையின்மையும் தலைவனைத் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவனாக ஆக்கி விடுகின்றன என்பதை வையத் தலைமையை வேண்டும் பாரதி நன்றாக விளக்குகிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் பரபரப்பின்றி, வரவரக் கண்டு, ஆய்ந்துபார்த்து முடிவு செய்ய வேண்டியது தலைவர் களுக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்ற பண்பு. இந்தப் பண்பாட்டைப் பாரதி பாஞ்சாலி சபதத்தில் அர்ஜுனன் மூலமாக உணர்த்துகிறார். சூதாட்டத்திலே தருமன் பாஞ்சாலியை வைத்துத் தோற்றுவிட்டான். பீமன் கொதித்தெழுகின்றான். மூத்தவன் என்ற மரபையும் மறந்து கடுஞ்சொற்களைக் கொட்டுகிறான். அச்சமயத்திலே அர்ஜுனன் பீமனைத் தடுத்து நிறுத்திச் சினமான தீயறி வினால் அடாத வார்த்தைகளைச் சொல்லாதே என்று அமைதிப்படுத்திப் பின்னர் அறம் பேசுகிறான். அறம் சொல்லுவதோடு அர்ஜுனன் நிற்கவில்லை. நியதி தத்துவத்தையும் உணர்த்துகிறான். “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்” என்ற அழியாத உண்மையை அறிவுறுத்துகிறான். தருமத்திற்கு மாறானவை அப்போதைக்குத் தலைதூக்கி நின்றாலும் அது வெற்றியாக மாட்டாது என்பதைத் தலைவர்கள் நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும். சகிப்புத்தன்மையே சாசுவது வெற்றிக்கு அடிப்படை - என்ற எண்ணம் அர்ஜுன ஆயினும் அவன் வீரவுணர்வும் தன்னம்பிக்கையும் விடவில்லை. பாடலைப் பார்ப்போம்.