பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

337


கவிதைகள் மூலம் நம்மை உசுப்பிவிட்டான். ஆனால், நாம் எழுந்தோமா! விடை காண்பது பல்கலைக் கழகத்தின் பொறுப்பு. பாவேந்தன் எழுச்சிமிக்க கவிதைகளைத் தந்தான்! விசையூட்டினான்! நன்றும் தீதும் இனம் பிரித்துக் காட்டினான்! இதுவே செய்யத்தக்கது என்று ஐயத்திற்கிடமின்றி உணர்த்தினான். பாரதிதாசன் இனிய, எளிய தமிழில் தெளிந்த நடையில் கவிதை தந்தவன். தமிழக வரலாற்றில் பாவேந்ததன் பாரதிதாசன் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தவன்.

குடும்ப விளக்கும் குறளும்

பாரதிததாசன் இயற்றிய காப்பியங்களில் ஒன்று குடும்பவிளக்கு. இந்தக் காப்பியம் அழகுத் தமிழில் உள்ள அரிய படைப்பு. புதிய புனைவுகள் பல பொதுளும் படைப்பு. குடும்ப விளக்கு ஒரு சாகா இலக்கியம். தமிழர் தலைமுறை என்றென்றும் போற்றிப் படிக்க வேண்டிய படைப்பு. உலக மொழிகளில் குடும்ப விளக்கைத் தந்தால், குடும்ப விளக்கு உலகக் காப்பியமாக விளங்கும். திருவள்ளுவர் காமத்துப் பாலில் அமைதி தழுவிய-ஆற்றல்மிக்க காதலை விளக்குகின்றார். காமத்துப்பாலில் திருவள்ளுவர் பேசவில்லை. திருவள்ளுவர் பாத்திரங்களையே பேச வைக்கின்றார். காமத்துப்பாலில் ஓர் இடத்தில்கூடக் கடுஞ்சொல் காணப்பெறவில்லை. தொட்ட தொட்ட இடமெல்லாம் கனிந்த அன்பு: செயல் நிலைக்குரிய உந்துதல்; மகிழ்ச்சி; இன்பம்; இதுவே காமத்துப்பால், பாவேந்தனின் குடும்ப விளக்கும் திருக்குறளின் காமத்துப்பால் போலவே அமைந்துள்ளது. பொதுவாகப் பாவேந்தன் படைப்புக்களில் ஆவேசம் அதிகம். ஆனால், குடும்ப விளக்கில் எங்கும் ஆற்றல் மிக்க அன்பையும், அமைதி தழுவிய அன்பையும் காணலாம். இக்காப்பியம் இலக்கிய நலன்கள் நிறைந்த படைப்பு. மனிதராய்ப் பிறந்தோர், குடும்பங்களில் வாழ்வோர், குடும்பங்கள் நலமுற வேண்டுமென விழைவோர் அனை வரும் படிக்க வேண்டிய காப்பியம் இது.