பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

349


“நின்றகண் ணாடி நெடும்பேழை தான்திறந்து
இன்று மலர்ந்த இலக்கியங்கள் - தொன்றுவந்த
நன்னூற்கள் செய்தித்தாள் நல்கி"

என்றும் பேசும் கவிதை வரிகளை உன்னுக.

தட்டாமல் ஈக - தனியில்லம்

குடும்ப விளக்குக் காப்பியம் மனையறத்தின் மாண்பினைச் சிறப்புற விளக்குகிறது. பாவேந்தன் காட்டும் மனையறம் தமிழர் மரபு வழி வந்த மனையறம், ஆரியக் கலப்பு வந்த பிறகு, வந்த கூட்டுக் குடும்பம் அன்று. கூட்டுக் குடும்பமுறை ஒரே நரகம்! அங்குக் காதலும் சிறப்பதில்லை: மனையறமும் மாட்சி யுறுவதில்லை: பொறுப்புணர்வும் வருவதில்லை. தற்சார்பான வாழ்க்கையும் கால்கொள்வதில்லை. கூட்டுக்குடும்பத்தில் எதிர் விளைவுகளே மிகுதி. "மாமியார் மருமகள் சண்டை" உலகமறிந்த செய்தி! அதோடு நாத்தியார் பிடுங்கல் வேறு! அதனால், திருவள்ளுவர்,

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"

என்று கூறினார். இந்தத் திருக்குறள் வழி தமிழர் மனையறம் கூட்டுக் குடும்பமன்று என்பதை உணர்கின்றோம். “தம்மில்" "தமது” என்பவற்றால் தனிக்குடித்தன முறை இருந்தது என்பது உய்த்துணரத்தக்கது.

நமது குடும்ப விளக்கின் தலைவியின் திருமணம் நிறைவேறிய நிலையிலேயே,

"தட்டாமல் ஈக தனியில்லம்" குடும்ப விளக்கு-(பக்.117) என்கிறாள்!

கவிஞனின் இந்த வரி ஊன்றிப் படிக்கத்தக்கது. தமிழர் வாழ்வில் கூட்டுக் குடும்ப முறை தகாது: பயன் தராது: