பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருந்தும், பாவேந்தன் காலந்தோறும் வளர்ந்து வந்த ஒரு கவிஞன் என்பதைக் காலந்தோறும் அவன் பாடிய கவிதைகளைப் படித்தால் உணரலாம். அவன் பாடல்கள் தனித் தமிழ் நடையில் அமைந்தவை; எளிய நடையுடையவை; பொருட்செறிவு உடையவை ! அவை பண்ணொடு பொருந்தும் பாடல்கள்; மனித குலத்தை முன்னோக்கிச் செலுத்தும் பாடல்கள்! எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தூண்டிச் செயற்பாட்டுக்கு ஊக்குவிக்கும் உந்து சக்தியுடைய பாடல்கள்! நீண்ட உறக்கம் தெளிவிக்க வந்த பாடல்கள். உரிமையும் உணர்ச்சியும் எழுச்சியும் தந்து எழுந்து நிற்கச் செய்த பாடல்கள். அப்பாடல்கள் மூடத்தனத்திற்கு வைத்த முழு நெருப்பு. வாழ்வியல் துறைதோறும் கவிதைகள் இயற்றி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவன் பாரதிதாசன். பழைமையை எதிர்த்துப் புரட்சிப்பண் பாடியவன், பாவேந்தன். சிறு சிறு எல்லைகளைக் கடந்து, மிக மிக விரிந்த எல்லைகளைத் தொட்டு உயர்ந்து விளங்கிய கவிஞன் பாவேந்தன்!

காலம் தந்த கவிஞன்

பாவேந்தனின் ஒட்பம் உலகம் தழிஇயது. பொது நலம் கொழித்துப் புதிய உலகம் படைக்கத் துடித்த பாவேந்தனின் இதயப் பொழிவுகள் அவனுடைய படைப்புகள். பாவேந்தன் வாழ்ந்த காலத்தில் ஒரு பகுதியில் நாடு அடிமைப்பட்டிருந்தது. மற்றொரு பகுதியில் நாடு விடுதலை பெற்றிருந்தது. அவன் காலம் இந்திய மக்கள் விடுதலை இழந்து, உணர்விழந்து பாழ்பட்டுக் கிடந்த காலம்! தமிழ் மக்கள் தமிழை மறந்து அயல் மொழிக்கு வரவேற்புக் கூறி, வாழ்த்துக் கூறி வாழ்ந்து கொண்டிருந்த காலம். கல்வியில், ஆட்சியில் ஆங்கிலம்; ஆண்டவன் சந்நிதியில் ஆரியம் இருந்த காலம். தமிழ் மக்கள் ஓரின உணர்வை இழந்து, சாதி, குலங்களில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்திற்குப் புதுமையும் பொதுமையும் வழங்கிடப் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் தோன்றினான். காலம் தந்த