பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாவேந்தன் காண விரும்பிய சமூகத்தை அமைக்கும் முயற்சியில் முன்னேறுவோம்!

உலகப் பார்வை

திருக்கோயிலில் இருக்கும் திருமேனியைத் தொழ, அத்திருக்கோயிலை எடுத்த தமிழன் நுழையக் கூடாது. ஆனால் "பேர் கொண்ட பார்ப்பனர்" மட்டும் நுழையலாம். இது என்ன சமூக நியதி! நீதி! இத்தகைய இழிவுகளைக் கண்டு குமுறிய பாவேந்தன் தொடக்கத்தில் இனவழிக் கவிதைகள் பாடியதுண்டு. ஆனால், பாவேந்தன் பாரதிதாசன் வளர்ந்து - உலகந்தழீஇய கவிஞனாக வளர்ந்து- நின்று பாடிய கவிதைகள் அற்புதமானவை. மானுடநேயமும் உலகந்தழிஇய ஒருமைப்பாட்டுணர்வும் பாவேந்தனின் கவிதைத் தொகுதி களில் நிறைந்துள்ளன. ஆதலால், பாவேந்தன் - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் உலகக் கவிஞனாக உயர்ந்து விளங்கும் மாட்சிமையை எண்ணி மகிழ்வோம்!

மக்களா? மரங்களா?

மனிதகுல வரலாற்றுப் போக்கில் கடவுள், அரசு, உடைமை ஆகியன மதிப்பீட்டுப் பொருள்களாக வளர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. ஒரோவழி, அருமையாகச் சான்றாண்மையும் மதிக்கப் பெற்றுள்ளது. இத்தகைய உயர் மதிப்பீடுகள் வரலாற்றில் நிலைபெற்று நிற்கவில்லை. கடைசியாக அரசு அதிகாரங்கூட நிலைத்த மதிப்பீட்டுக்குரியதாக இல்லை என்பதை முடியாட்சிகள் சரிந்து வீழ்ந்த வரலாறுகள் நினைவூட்டுகின்றன. எஞ்சியது மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். இன்று நம்முடைய நாட்டை வருத்தும் தீமை, பணமதிப்பீட்டுச் சமுதாயமேயாம். இன்று மனிதன் மதிக்கப்படுவதில்லை! இந்திய சமூகத்தில் நீண்ட காலமாகவே ஒரு பகுதியினர், மானுடமாக மதிக்கப் பெறாமல், ஒதுக்கப் பெற்ற அரிசனங்கள் - உயிரொடுங்கி,