பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

365


உணர்விழந்து நடைப்பிணங்களாக வாழ்ந்து வந்தனர். இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களை வென்றதன் விளைவாக இந்த மண்ணின் மைந்தர்கள் தாழ்த்தப்பட்டவர்களாயினர்; தீண்டத்தகாதவர்களாயினர். இந்தத் தீண்டாமையைச் சாத்திரம், சட்டம் இரண்டாலும் உறுதிப்படுத்தினர். இந்தக் கொடுமையை, பாவேந்தன் பாரதிதாசன் மறுக்கிறான். மக்களை மரங்களாக மதித்து நடத்தும் இழிநிலையைச் சாடுகிறான். மரங்களாகக் கூட எங்கே மதிக்கிறார்கள்? மக்களை மக்களாக மதிக்க வேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இதுவே பாவேந்தனின் உணர்வு.

"மக்களை மரங்களாக
மதித்தநாள் மலைஏ றிற்று!
மக்கட்குத் தொண்டு செய்தே
தனிமகன் வாழ வேண்டும்"

(குறிஞ்சித் திட்டு-பக்.85)


இங்கே "மக்கள்” என்ற பொதுமைச் சுட்டினை ஒர்க.

மக்களை மக்களாக மதிக்காது அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பொருள் சுருட்டும் புன்மையினரைக் "குட்டைப் புத்திக்காரர்” என்று கவிஞன் ஏசுகிறான்.

"குட்டைப் புத்திக் காரர் - மக்கள்
கூட்டத்தையும் நினையார்
கிட்டியது போதும்!” - எனக்
கேளிரையும் மறப்பார்"

(ஒருதாயின் உள்ளம்-பக்.118)


என்பதறிக.

அனைவரும் உறவினரே!

பாவேந்தன், புதிய 'ஆத்திசூடி' இயற்றியுள்ளான். இந்த

ஆத்திசூடியை, பாவேந்தன் அறிமுகப்படுத்தும் வரிகள் கவனமாகப் படிக்கத் தக்கவை.