பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

369



சுவர் சுயம்புவா?

பாவேந்தன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளன். பொதுவுடைமைச் சிந்தனையை விரிவாக, விளக்கமாகத் தமிழில் தந்த பெருமை பாவேந்தனுக்கேயுண்டு. "உலகத்தை நடத்துக!" என்கின்றான். இன்று நாமா உலகத்தை நடத்துகின்றோம்? உலகத்தை நாம் நடத்த வேண்டும். "வீட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வைத்த சுவரினை இடித்து அப்புறப்படுத்துக!” என்கின்றான் பாவேந்தன். இனிய அன்புடையீர், "வைத்த சுவர்" என்ற சொற்றொடரை நினைமின் சுவர் சுயம்பு அல்ல! "பாட்டனுக்குப் பாட்டன் காலத்திலிருந்து இருக்கிறது” என்று சிலர் கூறினாலும் கூறுவர் என்பதால் "வைத்த சுவர்” என்கின்றான். இணைந்து வாழத் தெரியாதவர்கள் வைத்த சுவர்! மனித குலத்தை உடைத்த உடைமை வர்க்கத்தினர் வைத்த சுவர்! இந்தச் சுவரினை இடி வீதிகளிடையில் திரை! ஆம்! உயர்சாதி, கீழ்சாதி இவற்றை நிலையாக்கும் திரைகள்! இன்று இறைவன் சந்நிதியில்கூட திரைகள்! ஏன் திரைகள்! இரகசியங்கள் குற்றங்களின் குட்டையிலேயே பிறப்பன. திரைகள் நீக்கப்பட்ட திறந்த வாழ்வு இன்று மானுடத்திற்குத் தேவை. நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே வேறுபாடுகள், எல்லைகள், எல்லைச் சண்டைகள் ஏன்? நாட்டின் எல்லைகளை அகற்றுக! இந்த எல்லைகளை அகற்றிக்கொண்டு பொதுமையில் ஏறுக! ஏறுக! இது கவிஞனின் ஆணை! நாம் எப்போது ஏறுவோம்? எப்போதாவது ஏறும் வாய்ப்புக் கிடைக்குமா? வரலாறுதான் கூறவேண்டும். வரலாற்றை உருவாக்கக்கூடிய இளைஞர்கள்தாம் கூறவேண்டும். நாட்டொடு நாட்டை இணைக்க வேண்டும். பாகிஸ்தானில் வாழும் இளைஞர்களே! இந்தியாவில் வாழும் இளைஞர்களே! எண்ணிப் பாருங்கள்! பிரிவினையால் விளைந்த துன்பத்தினை - விளைந்துவரும் துன்பத்தினை! ஜெர்மனியின் சுவர் இடிந்தது போல நமது எல்லைகள்