பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

371


தேவைதான்! இவர்கள் மாட்டுள்ள பற்று கடுகுபோல அளவாக அமையவேண்டும். வீடு நாட்டுக்குப் போயாக வேண்டும். ஆனால், நாடு வீட்டுக்கு வரக்கூடாது. இன்று, நமது நாட்டில் நாடு வீட்டுக்குள் வருவதைப் பார்க்கின்றோம். இது நெறியுமன்று; முறையுமன்று: கடுகு போன்ற உள்ளம் வேண்டாம்! அறவே வேண்டாம்!

அடுத்து, துவரம் பருப்பு! இது கடுகு அளவுக்குத் தீமையில்லை! ஒரோவழி நன்மையும் தரும்! ஆனால், துவரம் பருப்பும் அளவு மிகுதல் கூடாது! "துவரை உள்ளம்" ஊர்ப்பற்றுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. இரண்டு ஊர்களுக்கிடையில் ஏன் சண்டை? பிரிவினையில் குளிர் காயும் ஊர்ப் பெரிய மனிதர், ஊர்ச் சண்டையை மூட்டி விடுவார். ஊர்ப்பற்று இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் அது அடுத்த ஊருக்குப் பகையாக இருக்கக்கூடாது.

அடுத்தது, தொன்னை உள்ளம்! ஆம்! சின்னஞ் சிறிய தொன்னை. தொன்னை உள்ளம் போன்றது நாட்டுப்பற்று. நாட்டுப் பற்றின் காரணமாக உலகில் விளைந்த சண்டைகள் எண்ணிச் சொல்ல இயலாதவை. அதிகார வர்க்கம், ஆதி பத்தியப் போட்டிகள் சண்டைகளை வரவேற்கும். அப்போதுதான் ஆட்சியின் சிறுமைபற்றி மக்கள் எண்ண மாட்டார்கள் என்பது ஆள்வோரின் எண்ணம். நாட்டுப் பற்று தேவை! இன்றியமையாததுங் கூட! ஆனால் நாட்டுப் பற்றும் உலகப் பார்வைக்கு - உலக ஒற்றுமைக்குத் தடையாக இருக்கக்கூடாது! தாய் நாட்டின் மேல் உள்ள பற்றினால் மற்ற நாடுகளுக்குத் தீங்கு செய்யக்கூடாது. பாவேந்தன் ஓருலகப் பார்வையில் பாடிய பாடல் இதோ:

"தன்பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு
சம்பாத்யம் இவைஉண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!