பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

375


அவர்களுடைய சொத்துக்களுக்கும்தான் பாதுகாப்புத் தந்து வந்துள்ளன. ஏழைகளுக்குக் கிடைத்ததெல்லாம் அரைகுறை வயிற்றுச் சோறுதான்! அதுவும்கூட மனித நேயத்தினாலன்று; உரிமையினாலன்று; உழைப்புத் தேவைக்காகவே! அதுவும் நிரந்தரமன்று. இந்த உலகத்தைப் பழைய விதி - தலைவிதி இயக்குவதாக, பழைய புராணங்கள் கதை விட்டன.

உயிரென்று காப்போம்

இவற்றை எண்ணியே பாரதி, "இனி ஒரு விதி செய்வோம்!” என்றான். பாவேந்தன், பொதுவுடைமை முரசு கொட்டினான்: “புதியதோர் உலகம் செய்வோம்” என்று உடன்பாட்டுணர்வோடு, படைக்கும் உணர்வோடு பாடினான். மனித வரலாறு எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை நடந்துள்ள போர்களினால் ஏற்பட்டுள்ள மக்கள் இழப்பு, பொருள் இழப்பு பற்றி மாமேதை லெனின் கூறியுள்ளார். "இரண்டாவது உலகப் பெரும் போரில் இழந்த பொருளைக் கொண்டு உலகில் ஐயாயிரம் பேர் வாழும் ஒவ்வொரு சிற்றுாருக்கும் தேவையான கல்வி, மருத்துவ வசதி செய்துதர முடியும்" என்று கூறியுள்ளார் லெனின்.

பொதுவுடைமைச் சித்தாந்தம் வன்முறை தழுவியது என்ற ஒரு தவறான கருத்து உலக முழுதும் பரப்பப்படுகிறது. இது பொய்! பொதுவுடைமைச் சமுதாயம் இயல்பாக அறிவார்ந்த நிலையில் மலர வேண்டும். தேவைப்படின் அறுவை மகப்பேறு மருத்துவம்போல வன்முறையும் அவசியப்படலாம்" என்றுதான் கார்ல்மார்க்ஸ் கூறினார். தனியுடைமைச் சமுதாயந்தான் போருக்கு வித்து, பொதுவுடைமைச் சமுதாயம்தான் போரைத் தவிர்க்கும். இது, பாவேந்தனின் தெளிவான முடிவு.

"பொதுவுடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்!”