பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது பாரதிதாசன் வாக்கு! அந்தப் பொதுவுடைமைச் சமுதாயத்தைப் புனிதமோடு உயிரைப்போல காப்போம் என்று சூளுரைக்கின்றான். ஆம்! பொதுவுடைமைச் சமுதாயம் அடைந்துவிட்டால் போதுமா? அந்தப் பொதுவுடைமைச் சமுதாயம், மீண்டும் கெட்டுவிடாமல் புனிதமாகக் காக்கப்பட வேண்டுமாம்.

இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொது வுடைமை நாடுகளில் நடப்பது என்ன? சோவியத்து நாட்டில் "ஸ்டாலினிசம்" தோன்றவில்லையா? இன்று சோவியத்து நாட்டில் புனிதம் கெட்டுப்போன பொதுவுடைமைக் கொள்கைக்கு கோர்பசேவ், "பெரிஸ்த்ரோய்க்கா" என்ற பெயரில் புத்துயிர்ப்பு இயக்கம் நடத்துகிறார் அல்லவா? ஆனால் அன்றே பாவேந்தன்,

"புதியதோர் உலகம் செய்வோம்! - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!
பொதுவுடை மைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதையெங்கள் உயிரென்று காப்போம்!”

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.158)

என்றான். இது காலத்தால் உணர்த்திய அறம்!

பொதுவுடைமை வாழ்க்கை

பாவேந்தன் இங்ஙனம் பொதுவுடைமையை வரவேற்றுப் பாடியதுடன் நிற்கவில்லை. பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைக்கும் நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றான். "உடமைகளைப் பொதுவாக்கு" என்பது பாரதிதாசன் ஆத்தி சூடி உடைமை என்பது சொத்து. சொத்துக்கள் சிறிது சிறிதாகச் சேர்ந்து மூலதனம் ஆகின்றன. மூலதனமாகக் குவிந்த சொத்துடைமையைப் புனல் நிறைந்த தொட்டியென்று பாவேந்தன் விளக்குகின்றான். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் நிறைந்த தொட்டி, புனல் நிறைந்த தொட்டி. அதுபோலத்-