பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

27


உபாசகன். பாரதி, பழைமையைப் பாராட்டியவன்; புதுமையைப் போற்றியவன். சிந்தித்து வாழும் சமுதாயத்தில் பழைமைக்கும் புதுமைக்கும் சண்டை இருக்காது; வளர வேண்டிய சமுதாயத்தில் பழைமை-புதுமைக்கிடையே மோதல் இருக்கக் கூடாது. இருந்தால் வளர்கின்ற சமுதாயம் பாதிக்கப்படும். பாரதி, பழைமையை வெறுத்தவனல்ல. பழைமையைப் பாராட்டினான். ஆனால் பாரதி புதுமையைக் காணக் கூசியவனுமல்ல. நல்ல பழைமை, ஒரு புதுமையை ஈன்றெடுத்துத் தரும். அது போலவே புதுமை, பழைமையை முழுதாகப் பயன்படுத்திக் கொண்டு வளரும். பாரதி, பழைமையில் காலூன்றி நின்று பாடினான். பாரதி, விநாயகர் நான்மணி மாலை பாடும் பொழுது பக்தனாகவே திகழ்கின்றான். சோவியத் புரட்சியை வரவேற்றுப் பாடும் பொழுது புரட்சி செய்பவனாகி விடுகின்றான். பாரதி, "ஆலைகள் வைப்போம்” என்று பாடும் பொழுது தொழில் முனைவனாகத் திகழ்கின்றான்.

பாரதி, வளர்ந்த முழுமையான ஒரு கவிஞன். பாரதி, பாரத சமுதாயத்தை முழு விடுதலைப் பெற்ற சமுதாயமாகக் காண விரும்பினான். பாரதியின் கவிதை ஆவேசித்து நின்றதெல்லாம் "விடுதலை, விடுதலை" என்ற மையத்தில் தான்! பாரதி, ஒரு விடுதலைக் கவிஞன் முழு விடுதலைக் கவிஞன்.

பாரதி, பாரத சமுதாயத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய கவிஞன். பாரத சமுதாயத்தின் வரலாற்றைப் பொருளுடையதாக்கிய பெருமை, பாரதிக்கு உண்டு. பாரதி, சில்லறைச் சிந்துகள் பாடியவனல்ல. பாரதி, ஆவேசித்து நின்றது, பொழுதுபோக்கும் சீர்திருத்தமல்ல. ஒய்வு நாற்காலியின் உபதேசமுமல்ல. பாரதி, யுகாந்தரமாக வளர்ந்து வந்த அறியாமைக்கு-அடிமைத்தனத்திற்கு அதிர்வேட்டு என வந்தான். பாரதி, ஒரு யுகத்தையே அழிக்க நினைக்கின்றான். அதாவது, ஒரு யுகம் என்று சொல்லப்படுகின்ற - பல