பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழக்கங்கள் தலைகாட்டத் தொடங்கின. இந்நிலையை மாற்றி - சோஷலிச சமுதாயத்தைக் காப்பாற்றி - புத்துயிர்ப்புச் செய்துவரும் "பெரிஸ்த்ரோய்க்கா இயக்கம் வளர்க! வெற்றி பெறுக!

சொத்துடைமை வர்க்கம் தோன்றிய பிறகுதான் சொத்துடைமைக்கும் ஆதிபத்தியத்திற்கும் உரிமை கொண்டாடும் நிறுவன ரீதியான மத நிறுவனங்கள் தோன்றி ஆதிபத்தியச் சண்டைகளை, மதச் சண்டைகளை நடத்தி மனித உலகத்திற்கு தீங்கிழைத்து வந்தன. அதனால்தான் நிறுவன அமைப்பிலான சொத்துடைமையும் ஆதிபத்திய குணாம்சங்களும் உடைய மத நிறுவனங்களே பொதுவுடைமைக் கொள்கையை எதிர்க்கின்றன. இதனை, பாவேந்தனின் ஒரு மத நிறுவனத் தலைவரின் 'கடவுள் பக்தி' விளக்குகிறது. "சொத்துக்கள் எல்லாம் பொதுவுடைமை என்று ஆணை பிறந்துவிட்டது என்ற செய்தி கிடைத்தவுடன் கடவுளையே மறந்துவிட்டார் மத நிறுவனத்தலைவர்” என்று விளக்கும் பாவேந்தனின் கவிதை நகைச்சுவை மிக்கது; போர்க்குணம் ஊட்டவல்லது.

பொதுவுடைமை உலகத்திற்கு ஆணி - அச்சு உழைப்பேயாம். உழைப்பு, உலகை இயக்கும் ஓர் அற்புத ஆற்றல், உழைப்பு. சாதாரண உழைப்பா? இல்லை, இல்லை! மெய் வருந்தி வியர்வை சொட்டச் சொட்ட உழைக்கும் உழைப்பு: உழைப்பாளர் சிந்தும் வியர்வைத் துளிகளில் உலகைக் காண்பது, இந்த உலகை உழைப்பாளர்களுக்கு உரியதாக்குவது அறிஞர் கடன்! சான்றோர் கடன்!

"களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு உழைப்பவர்க்கு உரியதென் பதையே!

(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி, பக்.155)