பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

381


பாவேந்தன் நூற்றாண்டு விழாப் பொழுதிலாவது எண்ணுங்கள்! செய்யவேண்டுவன பற்றி எண்ணுங்கள்! துணிச்சலோடு செயற்படுங்கள்! பாவேந்தன் எண்ணியவை நடைபெற வேண்டும். அப்போதுதான் பாவேந்தனுக்குரிய புகழ்சேரும். பாவேந்தன் அடிச்சுவட்டில் தமிழரின் கல்விநிலை உயர்தல் வேண்டும். தமிழர் எப்படிக்கும் முதற் படியாய்த் தமிழ் படிக்க வேண்டும். தமிழ்வழிப் படிக்க வேண்டும். தமிழ் வளர வேண்டும். இவையே பாரதிதாசனின் குறிக்கோள்! எனினும் பாவேந்தன் காட்டிய வழி மாறுகிறது! தடம் மாறுகிறது! அன்புகூர்ந்து எண்ணுங்கள்!

முதன் மொழி தமிழ்

நமது தமிழ் மொழி, மொழிகள் அனைத்திற்கும் முன்னேதோன்றி மூத்த மொழி என்று பாவேந்தன் பெருமிதத்துடன் பாடுகின்றான்! ஆம்! வையகம் கையசைத்துக் கொண்டிருந்த கலத்தில் நாவசைத்தவள் தமிழ்த்தாய்! உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மை நிலையில் விளங்கும் தகுதி, தமிழுக்கு உண்டு என்பது மொழிஞாயிறு பாவாணர் கருத்து. பாவேந்தன்,

முன்னைத் தோன்றிய மக்கள்
முதன்முதல் பேசிய மொழியே
மொழியே மொழியே எனவே வாழ்த்தும்
தன்னேரில் லாத தமிழ் அன்னையே
உனை வாழ்த்தினேன்! (தேனருவி பக்.10)

என்று பாடுகின்றான்.

பைந்தமிழ்

தமிழ் முன்னே தோன்றிய மொழி. மக்கள் முதன் முதலில் பேசிய மொழி தமிழ்! தமிழ் தனியே தோன்றித் தனித்தன்மையுடன் வளர்ந்து தனித்தன்மையுடன் இயங்கும்