பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

385


பெறவில்லை. தமிழ் வளர்ச்சி வேறு; தமிழ்ப் பாதுகாப்பு வேறு. வளர்ச்சியில்லாமல் பாதுகாக்கப் பெற்றாலும்கூடக் காலப்போக்கில் மொழி அழியும். மொழியைப் பேசும் மக்கள் தம் வளர்ச்சியின் நலங்கருதித் தாய் மொழியை மறந்து விடுவர். தம் வளர்ச்சிக்குத் துணை செய்யக்கூடிய பிற மொழியைப் பயிலத் தொடங்கி விடுகின்றனர். இன்றையத் தமிழகத்தின் நிலை என்ன? ஆங்கிலம்தான் வாழ்க்கைக்குத் துணை செய்யும் என்ற நம்பிக்கையில் தமிழ் வழிக் கற்காமல் ஆங்கில மொழி வழிக் கற்கின்றனர். இந்த நிலை எங்குக் கொண்டுபோய் விடும்? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்; தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபடுங்கள்.

வளர்பிறை போல்வ ளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்
உளத்தையும் உலகில் ஆர்ந்த
வளத்தையும் எடுத்துச் சொல்லால்
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்
வீறுகொள் இசைய டைந்தும்
அளப்பிலா உவகை ஆடற்
றமிழேநீ என்றன் ஆவி!

(அழகின் சிரிப்பு பக்62)


என்ற பாவேந்தன் பாடல் சிந்திக்கத்தக்கது. மக்கள் சோற்றினால் மட்டும் வாழ்தல் நன்றன்று. ஆகவும் ஆகாது. தமிழால் வாழும் வாழ்க்கை பெற்றாக வேண்டும்.

பாவை தனக்கு இவ்வுலகில் தேவை
சோறன்று மிளகின் சாறன்று தமிழ்ஒன்றே!

(குறிச்சித்திட்டு பக்.92)


பாவேந்தன் தமிழின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டினை உயிர்ப்புள்ள சொற்களால் பாடி, நம்மனோரின் உணர்வையெல்லாம் தொடுகின்றான். தமிழ் உயிருக்குச் சமம். அதாவது தமிழே உயிர்! தமிழ்ச் சமூகம் வளர்வதற்கு