பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

387


பழகு தமிழறியாப் பாவை தமிழருக்கு உயிரில்லா உடலே அன்றோ" (காதல் நினைவுகள் பக்.39)

என்பதறிக.

வந்த மொழிக்கு தந்த வரவேற்பு

தமிழ் செழித்து வளர்ந்த ஒரு மொழியாக விளங்குகின்றது. இந்த வளர்ச்சி எளிதாக அமைந்த ஒன்றல்ல. தமிழ் காலந்தோறும் இடர்ப்பாடுகளைக் கண்டு கடந்து, நீரினை, நெருப்பினை வென்று வளர்ந்து வந்த மொழி என்பதையும் நினைவில் கொண்டால், தமிழின் அருமை வெளிப்படும் அல்லது தெரியும்.

தமிழ் மக்கள் தம் தாய்மொழி தமிழின் மீது பாவேந்தனைப் போல உயிர் மூச்சினை வைத்ததில்லை. வந்த மொழிகளையெல்லாம் வரவேற்று இடம் தந்து ஏற்றம் கொடுத்தனர்; வடமொழிக்கு இடம் தந்து தமிழைப் புறக்கணித்தனர்; புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்; கொன்றனர்; கொல்லுகின்றனர். தமிழில் வடசொல் கலப்பின் விளைவாகக் கன்னட மொழி பிறந்தது; மலையாள மொழி தோன்றியது; தெலுங்கு மொழி தோன்றியது. ஏன், வீட்டுச் சடங்குகளிலும் கோயிற் சடங்குகளிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. வடமொழியே இடம் பெற்றது. கடவுளர்கூடத் தமிழ் கேட்கமுடியாத அளவுக்குக் கருவறைக் கதவு சாத்தப்பட்டது. கடவுள் இந்த கட்டுக் காவலைக் கடந்து தமிழ் கேட்க விரும்பிக் காசு தந்து கேட்டுள்ளான்.

"...திருமிழலை - இருந்து நீர் தமிழோ டிசைகேட்கும் இச்சை யால்காசு நித்தல் நல்கினர்" (ஏழாந்திருமுறை பக். 399