பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூற்றாண்டுகள் வளர்ந்த அடிமைத்தனத்தை-நிர்வாணமான சுயநலத்தைச் சுட்டுப் பொசுக்குகின்றான். பாரதியின் கவிதைத் தீ, கல்வியில்லாத ஊரை மட்டும் கொளுத்தவில்லை, மடமையைக் கொளுத்துகிறது. "எனக்கே உடைமை, உடைமைக்காக உடன் பிறந்த சகோதரனையும் கொல்வேன், பழகிய நட்பையும் பகையாக்குவேன்" என்று பிறக்கிறது கலியுகம். கலியுகப் பிறப்பை இங்கனம்தான் மகாபாரதம் கூறுகிறது. உடைமை வர்க்கம் தோன்றி, உழைப்பைச் சுரண்டும் பொய்ம்மைத்தனமான வாழ்க்கைக்கு வித்திட்டதே கலியுகம்தான். உடைமைப்பற்று, கள்ளைவிடக் கொடியது; உடைமைப் பற்று, உடன் பிறந்த சகோதரனையும் வஞ்சிக்கக் கற்றுக் கொடுக்கும், ஊக்கத்தையெல்லாம் உறிஞ்சும். உடைமைக் குணம் நச்சுத் தன்மையுடையது. உடைமைக் குணம் தோன்றி வளர்ந்துவிட்டால், உடைமை அனுபவத்திற் குரியது வாழ்க்கைக்குரியது. ஒப்புரவு வாழ்க்கைக்குரியது என்ற தத்துவம் போய்விடும். உடைமைகளை ஒன்று பலவாக இவறிக் கூட்டவே செய்யும் உடைமை வர்க்கம் தோன்றிய பிறகு, சமுதாய வரலாறு தடம் புரண்டுவிடும். பிறர் பங்கைத் திருடும் களவு வரும். கடவுள் முதல் கவிஞன் வரையில் உள்ள அனைவரையும் உடைமை வர்க்கம் தனது ஒலிபெருக்கி களாகவே இயங்கச் செய்யும். விநோதமாக வளமும் வளரும்; வறுமையும் வளரும்.

இத்தகைய கலியுகத்தில் பிறந்து, கலியுகத்தைக் களத்தில் சந்தித்து, கலியுகத்தோடு போராடி, கலியுகத்தைக் கொன்று கிருதயுகத்தைக் கொண்டுவரப் பிறந்தவன் கவிஞன் பாரதி. எனவே, பாரதி, ஒரு யுகப் பிரளயக் கவிஞன், பாரதி, ஒருயுக சந்திப்பாக விளங்கியவன். பாரதி, தானே தனது இலட்சியத்தை ஐயத்திற்கு இடமின்றி வைக்கின்றான். இதோ அவன் பாடல்:

"பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே