பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வில்லை. தமிழை உயிராயக் கொள்ள வேண்டும் என்பதே பாவேந்தன் கொள்கை.

"ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்தநாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் (தமிழியக்கம் பக்.77)

"எனக்குத் தமிழில் பேசத் தெரியாது” என்று பலர் முன்னிலையில் கூறிப் பெருமைபெறுவது, உயர் அரசு அலுவலர் முதலியோருக்கு இயல்பாக இருந்த பழக்கம். பாவேந்தன் இத்தகைய போக்கைக் கடுமையாக மறுக்கின்றான். தமிழ்நாட்டில் பிறந்தோம் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லையோ? என்று வினவுவதுடன் அவர்கள் திருந்தவேண்டும் என்று எச்சரிக்கை செய்கின்றான்.

சில மாறுதல்கள்

இன்றைய தமிழ்நாட்டு அரசு அலுவலர்களிடையில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது! இன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைத் தலைவர்கள் நல்ல தமிழில் நிரந்தினிது பேசும் ஆற்றல் பெற்று விளங்குகின்றனர். நல்ல தமிழில் ஆட்சி ஆவணங்கள் தயாரிக்கின்றனர். ஏன் இன்று பொறியியல் துறையில், மருத்துவத்துறையில் நல்ல தொழில்நுட்ப நூல்களை எழுதும் அறிஞர்கள் பலர் உள்ளனர். இந்த வகையில் பாரதிதாசனின் கொள்கைக்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.

யுகப்பிரளயமே வந்தாலும் தமிழர், தம் தமிழ்க் குருதியை இழக்க மாட்டார்கள். பலநூறு ஆண்டுகளாகத் தமிழை அழிப்பதற்குப் பலப்பல முயற்சிகளை மேற்கொண்ட