பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வரும்; நெஞ்சில் தூய்மை வரும்; வீரம் வரும். ஆதலால் நல்வாழ்க்கை அமைவிற்குத் தமிழ் வழிக் கல்வியே துணை செய்யும். ஆதலால், தமிழ்க் கல்வியை எல்லாரும் பயில்கின்றனர் - பயின்றனர் என்ற நிலையே தமிழ் நாட்டிற்கு ஆக்கம் தரும். இதனைப் பாவேந்தன்,

"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக் கும்நிலை எய்திவிட் டால்
துன்பங்கள் நீங்கும்; சுகம்வரும்; நெஞ்சில்
தூய்மையுண் டாகிவிடும்; வீரம் வரும்"

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி பக்.93)

என்று பாடுகின்றான்.

அயல்மொழி அண்டும் அளவுக்குத் தாழ்வே!

தமிழரும் தமிழும் தணலும் சூடும் போல வாழ வேண்டும். தமிழர் வாழ்வில் அயல்மொழி அண்டும் அளவுக்குத் தமிழ் தாழும்; தமிழர் வாழ்வும் தாழும். தமிழ், தமிழிலக்கியம், தமிழினம் இவை ஒன்றுக்கொன்று ஆதாரம் - அடிப்படை. இவற்றில் ஒன்று அழிந்தாலும் எஞ்சிய இரண்டும் வாழா. தமிழ்நாடு வீழ்ச்சியுறும். நாட்டின் உரிமை காக்கும் பணி, தமிழ்ப் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலுமே இருக்கிறது.

"தமிழனும் தமிழும் தணலும் சூடும்!
அமிழ்தமே ஆயினும் அயல்மொழி அயல்மொழி!
அயல்மொழி தமிழை அண்டும் விழுக்காடு
தமிழ்மொழி தாழும் தமிழன் தாழ்வான்!
தமிழை வடமொழி தாவும் நோக்கம்
தமிழை அழிப்பதும் தான்மேம் படுவதும்!
வடமொழி அதனின் வழிமொழி எதுவும்
தமிழ்மேல் சந்தனம் தடவவே வரினும்