பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

397


அனைத்திலும் தமிழர் அறிவு பெற்றால்தான் தமிழர் நிலை உயரும்! தமிழ் வளரும்! நல்ல எளிய தமிழ் நடையில் அறிவியல் செய்திகளை சாதாரண மக்களுக்கும் சென்று சேரும்படி செய்யவேண்டும். நாள்தோறும் நூற்கழகங்கள் தோன்ற வேண்டும். இது பாவேந்தனின் எண்ணம். பாவேந்தன் எண்ணத்தை நாம் நிறைவேற்ற வேண்டாமா? இன்று தமிழுக்கு உரியன செய்யாமல் தமிழின் சென்ற காலப் பெருமைகளைப் பறையறைவதில் என்ன பயன்? இதோ, நீங்களே பாவேந்தனின் கவிதைகளைப் படியுங்கள்!

"உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்! இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்! எங்கள்தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்வித் தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந் தோமில்லை! தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! ('பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதி; பக்.95)

பாரதிதாசன் அடிச்சுவட்டில் தமிழைத் தாபிப்போம் வர்ரீர்!

கணக்காயர் கடமை!

அடுத்து, தமிழர் வளர்ச்சியில், தமிழ் வளர்ச்சியில் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கணக்காயர்கள் - ஆசிரியர்கள்! நல்ல தமிழில் எழுதவும் பேசவும் ஆற்றலுள்ள ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் - முற்போக்கு எண்ணத்துடன் உரியவாறு உழைப்பாராயின், தமிழன்னை விழித்தெழுவாள்! தமிழ் மக்களின் அடிமை வாழ்வும் தீரும்! என்கின்றான் பாவேந்தன்!

கழகத்தின் கணக்காயர், தனிமுறையில் கல்விதரு கணக்கா யர்கள்,