பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவரை இசைவிக்க வேண்டி நாம் முதல்நிலையில் திருமுறைத் தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்குரிய சான்றுகளடங்கிய நூல்கள் பலவற்றில் அடையாளமிட்டு அவர் பார்வைக்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் அறிஞர் பெருமக்கள் பலருடன் அவரைச் சந்திக்கச் சென்றோம். அதுபோது அவர் தாம் ஏற்கனவே அனுப்பிய நூல்களை முன்னதாகப் பார்வையிட்டிருந்ததால் எந்தவித மறுப்புமின்றித் திருக்கோயில்களில் திருமுறைத் தமிழருச்சனை செய்வதற்கு உடனே இசைவளித்தார்; பின், அரசு ஆணையும் பிறப்பித்தார். பின்னர் அவரே மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் 1962ஆம் ஆண்டில் நாமும் உடனிருக்க, திருமுறைத் தமிழருச்சனையைத் தொடங்கியும் வைத்தார். இது வரலாறு. திருக்கோயில்கள் திருமுறைத் தமிழ் அருச்சனைக்குரியன என்ற அரசாணையை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பெற்றுத் தந்தும் தமிழர்கள் தமிழ் அருச்சனை செய்ய முன்வரவில்லை. என்னே உறக்கம்! நிலைகெட்ட நிலை! இறைவா! எங்கள் தமிழர், என்று விழிப்புநிலை எய்துவர்? பாவேந்தன் கவிதையைப் படியுங்கள்!

"சொற்கோவின் நற்போற்றித் திருவகவல்
செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த
தெவ்வாறு சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன்
மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா
ராயணமேன் திருக்கோ யில்பால்?"

('தமிழியக்கம்' பக்.59)


ஆட்சியியலில் தமிழ் வேண்டும்

ஆங்கிலம் மட்டுமே கற்றவர்கள் தமிழ் நாட்டரசின் அலுவல்களைப் பார்ப்பதைப் பாவேந்தன் விரும்பவில்லை. ஏன்? ஆள்கிறவர்கள், ஆளப்படுகிறவர்களுடைய மரபுகளை