பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

401


அறிந்திருக்க வேண்டும். இது ஆட்சியியலின் நியதி. அதுவும் தமிழ், தீங்கறியாதது. தமிழ் மக்கள் யாருக்கும் தீவினை சூழாது நல்லனவே எண்ணி நல்லனவே செய்யும் மக்கள். ஆதலால், தமிழ் நாட்டை ஆளுவோர் தமிழறிந்தவர்களாய் இருத்தல் வேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம். இந்த எண்ணம் இன்று ஓரளவு நிறைவேறி வருகிறது. இன்னும் முழுமை யடையும் என்று எதிர்பார்க்கத் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு, தமிழுக்குத் தொண்டு செய்து, தமிழை உயர்த்து பவர்கள் உயர்வார்கள். தமிழுக்குச் தொண்டு செய்வது, தரித்திர நாராயணர்களுக்கு அமிழ்து அளித்ததுபோல என்று கவிஞன் எடுத்துக் கூறும் பாங்கு நுட்பமானது. அதாவது, தமிழ்க் கல்வியைக் கடைகோடி மனிதருக்கும் வழங்கி அறிவை உண்டாக்கி வளர்த்து மூடத்தனத்தின் சிக்கறுத்து அறிவறிந்த ஆள்வினையை அறிமுகப்படுத்தி விட்டால் அவர்கள் தாமே வளம் பல படைத்து வாழ்வர் என்பது பாவேந்தனின் கருத்து.

"தமிழை உயர்த்தினார் தாமுயர் வுற்றார்”
என்றசொல் நாட்டினால் இறவா நற்புகழ் என்று
வாய்ந்திடும் என்ற நடுக்கமோ?
தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு
அமிழ்தம் அன்றோ அண்ணன் மாரே!”
(இசையமுது 2-பக்:31)

என்பது காண்க.

தமிழ் வளர்ந்த மொழி. தமிழ் மக்கள் வளர்ந்த நாகரிக வாழ்வினர், தமிழர் தம் வாழ்வியல் அந்தண்மையும் சான்றாண்மையும் சார்ந்து விளங்குவது. தமிழ்நாடு தமிழ்ச் சான்றோர் காட்டிய நெறி வழியிலேயே ஆளப்படுதல் வேண்டும்.

தமிழ் மக்கள் யாரையும் எளியர் என்று எண்ணி எள்ளி நகைக்க மாட்டார்கள். யார் ஒருவரையும் பெரியர் என்று