பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வியந்து பாராட்டமாட்டார்கள். மனிதம் என்ற நிலையே தமிழர் முதன்மைப்படுத்தும் நெறி.

"......மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” (புறம். 192)

எல்லாரும் இன்புற்று வாழ்தல் வேண்டும். இதுவே தமிழர் குறிக்கோள்.

"ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே! (புறம்.194)

என்ற நெறிமுறை தமிழர் முறை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் நெறியே தமிழர் நெறி. இந்நெறிகள் வழி, தமிழ் நாட்டுக்குச் சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம்.

"நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம்
தமிழ்மக்கள் இன்பம் கோரி
இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே! .
அம்மூச்சு தமிழே! அந்தப்
பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர்
புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே
இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டுமதை
இகழ்வானை ஒழிக்க வேண்டும்!"
(குறிஞ்சித்திட்டு-பக்.198)

என்ற பாவேந்தன் எண்ணப்படி தமிழ்நாடு ஆளப்படும் நாளே தமிழ்நாட்டுக்குப் பொற்காலத் தொடக்கமாகும்!