பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசனின் உலகம்

403


நல்லதோர் திட்டம் வேண்டும்

பாவேந்தன் தமிழ் நாட்டின் நலனுக்கென்று திட்டம் அமைத்துச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவதை அனைவரும் உணரவேண்டும். உணர்ந்தவழி, செய்யவும் முற்படவேண்டும், நல்லன நடைபெறவேண்டும். அல்லன அகலுதல் வேண்டும். களை மண்டிய கழனியில் பயிர் வளருமா? நாட்டில் செல்வ வளம் செழிக்கச் செய்தல் வேண்டும்; செந்தமிழைக் காத்திடுதல் வேண்டும். சாதி, மத பேதங்களற்ற சமுதாயம் காணல் வேண்டும், ஏன்? மாமேதை மார்க்ஸ் வழியில் அரசுங் கடந்த பொதுமை நலம் செறிந்த சமுதாய அமைப்பைக் காண்பது தமிழர் கடன்! இந்தக் கடமையை நாம் விரைந்து செய்து முடிக்க வேண்டாமா?

"நல்லதோர் திட்டம் அமைத்தல் நம்கடன்
அல்லன அனைத்தும் அழித்தல் நம்கடன்
செல்வம் நாட்டிற் சேர்ப்பது நம்கடன்
செந்தமிழ் காத்தல் சிறந்தகடன் நமக்கு!
மதம் அகன்ற சாதி மறைந்த
அரசு கடந்தார் வாழ்க்கை அமைப்பது
நம் கடன்."
(குஞ்சித்திட்டு-பக்.319)

என்று பாவேந்தன். அளித்த திட்டத்தை நிறைவேற்ற உறுதி கொள்வோம்.

தமிழ்த் தலைவர்களை உருவாக்குக!

தமிழரின் குறை தீர்தல் வேண்டும். இன்னே தீர்தல் வேண்டும். யாராவது ஒரு தமிழன், ஒரு தமிழ் மறவன், தமிழர் தலைவன் முன்வரமாட்டானா? என்று எதிர்பார்க்கின்றான் பாவேந்தன் பாரதிதாசன்!. நமது தலைமுறையில் இரண்டு தலைவர்கள் கிடைத்தனர். ஆனால், அவர்கள் தமிழகத்தின் தரம் உயர்வதற்கு முன் மாண்டு போயினர்! இது தமிழகத்தின் தீயூழேயாம்! தமிழ்த் தலைவர் வரவை