பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

409


பலாபலன்களை, மனப் போராட்டத்தைக் 'குமாஸ்தாவின் பெண்' என்ற கதையில் காந்தா என்னும் பாத்திரத்தில் காண முடிகிறது.

அறிஞர் அண்ணாவின் படைப்புக்கள் பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக வரவில்லை. பக்கம் பக்கமாக எழுதி, படிப்பவர்களுக்கு அலுப்பை உண்டாக்காமல், சுருக்கமாகவும் நேரிடையாகவும் எடுத்துக்கொண்ட கருத்துக்களைச் சொல்லும் கதை நூல்கள் அருமையேயாகும். அதை அண்ணாவின் கதைகளில் காணலாம்.

அறிஞர் அண்ணா, உலகம் மிகச் சிறந்த பல்கலைக் கழகம் என்ற மூத்த கருத்தின் முதல்வராகத் திகழ்கின்றார். அவர் நிறைய உலகத்திலிருந்து படித்துக் கொள்கிறார், நம்மையும் படிக்கத் தூண்டுகிறார். 'குமாஸ்தாவின் பெண்'ணில் இராகவன் மூலம் 'உலகத்தைவிட உன்னதமான புத்தகம் இருக்கிறதா?' என்று நம்மைக் கேட்கிறார்.

அண்ணா அவர்கள் சமூகத்தின் மனப் போக்குகளை ஓரளவு தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார் "சமூகத்தினர் கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதில்லை; அலைகளையே எண்ணி அலமருகின்றனர்; நெஞ்சினோடு நெஞ்சு உற்று நோக்கும் உணர்வின்றி முலாம் பூசிய முகத்தோடு மோதுகின்றனர்.

மனித சமூகத்தை ஏமாற்றி விடுவதென்பது கெட்டிக் காரத்தனமான காரியமல்ல. ஏனெனில் அவர்கள் எளிதில் ஏமாறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உயர்வுக்குப் பயன்படாத உதட்டில், உலாவும். இரக்க உணர்ச்சிகளே உள்ளன.

கண்டும் கேட்டும் போடும் பிச்சைகளில் மகிழும் மக்கள் மனப்போக்கு மாறாத வரையில் சமூகத்தில் நிலையான வளமான பொருளாதாரப் புரட்சியைத் தோற்றுவிக்க முடியுமா?” என்று பார்வதி பி.ஏ.யின் மூலம், நம்மைக் கேட்கிறார்.

கு.V1.27