பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

417


அண்ணா அவர்கள் லாவகமாகப் பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம். "செல்வம் சமூகத்தில் சிலரிடத்தே குவிவது காசநோய் போன்றது. காச நோய் பரவிய உடல் இளைக்கத்தானே செய்யும்?" என்று வினாவை எழுப்புகிறார்.

அமரர் நேருஜி “எல்லோருக்கும் ஒரு வாக்கு” என்பதினாலேயே பூரண மக்களாட்சியும் சமதர்ம சமுதாயமும், சமூக ஒருமைப்பாடுடைய சமுதாயமும் அமைந்துவிடாது" என்று தெளிவாகக் கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவும் இந்தக் கருத்தில் தெளிவாகவே இருக்கிறார்; உறுதியாகவும் இருக்கிறார்.

அதனால்தான் போலும் அவர் கட்சி, நிறைய நன்கொடைகள் வாங்கவில்லை. "குடியரசு முறையையும் வைத்துக்கொண்டு சமூகத்திலேயும், தொழில் உலகிலேயும் ஆதிக்கக்காரர்களுக்குப் பிடி இருக்கும்படியும் அனுமதித்து விட்டால் புத்தியுள்ள ஒரு மன்னனே கூட குடியரசுக் கோட்பாடு பேசும் அமைச்சர்களை ஆட்டிப் படைக்க முடியும்” என்று இரண்டுபட்ட கருத்துக்கு இடமின்றி "எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

அறிஞர் அண்ணா கசப்பு மருந்தைக் கருப்பட்டியுடன் கலந்து கொடுப்பதைப் போல தனது சீர்திருத்தக் கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்து படைத்துக் காட்டுகிறார். பெண்கள் முன்னேற்றத்தில் அறிஞர் அண்ணாவுக்குத் தனி ஈடுபாடு உண்டு.

'ரோமாபுரி ராணிகள்' என்ற அறிஞர் அண்ணாவின் படைப்பு விரச உணர்ச்சிகள் நிறைந்தது என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட ஓர் எதார்த்த நிலைமையை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது எழுத்தாளன் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான்.