பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

419


களோடு கருவி போலக் கருதுகிற மனப்போக்கை அண்ணா, பார்வதி, பி.ஏ.யில் இடித்துரைக்கின்றார்.

அறிஞர் அண்ணா சமயத்துறையில் புரியாத புதிராக இருக்கிறார். இறைவனைப் போலவே அவரும் கேள்விக் குறியாகவே திகழ்கிறார். இறைவனை எப்படி "இப்படியன் இவ் வண்ணத்தன்” என்று எழுதிக்காட்ட முடியாது என்று சொன்னார்களோ, அது போலவே அறிஞர் அண்ணாவும் விளங்குகிறார்.

இஃது ஒரு பொதுவான உண்மையே. ஆனால் உண்மை அப்படியல்ல. அண்மைக் காலமாக அவர் அதனைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார். "சமயம் வேண்டுமா, வேண்டாமா என்பது அல்ல எங்கள் கேள்வி. அது எப்படியிருக்க வேண்டும் என்பதே எங்கள் கேள்வி" என்று உரத்த குரலில் கூறி வருகிறார்.

அண்மைக் காலமாக என்பதால் வாக்குகளுக்காகவும் ஆட்சிக்காகவும் என்று சிலர் கருதக்கூடும். இது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய 'புராண - மதங்கள்' என்ற புத்தகத்தை உய்த்துணர்ந்து படிப்பவர்கள் இதனை உணர முடியும். புத்தரைப் பற்றி பார்வதி, பி.ஏ.'யில் குறிப்பிடும் இடத்தில் அடியிற் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"இன்பத்தை மதிக்க மறுத்ததுடன் போகப்படுகுழியின் இலாபச் சுழலும் தாம் செல்லும் வழியிலே காணப்பட்ட காலை அவைகளிலே இடறி விழாமல் இன்பம் - நிரந்தர இன்பம் - துன்பத்துடன் பிணைத்திருக்கும் இன்பமல்ல - இணையற்ற - எல்லையற்ற - இன்பம் எது? எங்கேயிருக்கிறது? எங்ஙனம் பெற முடியும்? என்று கண்டுபிடிப்பதிலே காலத்தைச் செலவிட்டார்." என்று எழுதியுள்ள பகுதிகள் தெளிந்த சமயத் தத்துவத்தை விளக்குவனவாகவில்லையா? "ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே" என்ற மணிவாசகரின் வாக்கு இதனை நமக்கு நினைவுக்குக் கொண்டு வரவில்லையா?