பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘பட்டுக்கோட்டை’யின் பாடல்கள்

425


இந்த முன்னுரை கவிஞரை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறோம்.

இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே வெளிவந்துள்ளன. அதிலும் பெரும்பாலும், கிராமீயப் பண்பையும், பண்ணையும் தழுவி வெளிவந்துள்ளன. உருவகங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டுகிறார். கிராமத்துச் சாதாரண மனிதனின் மொழியில் பேசுகிறார். பாடல்கள் எளிய நடையில் இருந்தாலும் கருத்தால் அவை ஆழமாக இருக்கின்றன. இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். வளரவேண்டிய நிறைவுகளையும் வரிசைபடுத்திக் காட்டுகிறார். பொதுவாக, கவிதைகள் சிந்தைக் கினியனவாக - வாழ்வுக்கு வளமூட்டுவனவாக இருக்கின்றன.

உலகம் தொடங்கின நாள்தொட்டு, மனித குலத்தில் பல்கிப் பெருகி வருகின்ற வேற்றுமையுணர்வுகளும், வேறுபாடுகளும் வருத்தத்தைத் தரக்கூடியனவாக உள்ளன. பலர் கூடி வாழும் சமுதாயத்தை அமைப்பதே மனிதனின் தலையாய கடமை, சமுதாய அமைப்பைத் தோற்றுவித்து, அந்த அமைப்பைக் காப்பாற்றுவது தலையாய ஒழுக்கம். ஆனால், இன்றைய மனிதனோ அதைச் செய்யாமல், சமுதாய அமைப்பில் கலகங்களை எழுப்பிக் கலைக்கின்றான். சமுதாய அமைப்பின் தோற்றத்திற்கும் அவற்றின் - பாதுகாப்பிற்கும் துணை நிற்கவேண்டிய அரசியல், மொழி, சமயம் ஆகியவை களின் பேராலேயே வேற்றுமைகளை விளைவித்துப் பகைமையைத் துண்டி விடுவதைப் பார்க்கிறோம். இப்போக்கு கவிஞரை மிகவும் வருத்தியிருக்கிறது. பல்வேறு கவிதைகளில், வேற்றுமைகளை விலக்கி, ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். விண்ணையிடிக்கும் மலையின் முகட்டிலே, அருவிகள் தோன்றுகின்றன. அந்த அருவிகள் பொழியும் இனிய நீர்ப்பெருக்கு கடலோடேயே

கு.vi 28